தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன்அரிசி பறிமுதல்


தூத்துக்குடியில் இருந்து   கேரளாவுக்கு கடத்த முயன்ற  10 டன் ரேஷன்அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 23 Nov 2022 6:46 PM GMT)

தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன்அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபரை போலீசார் ைகது செய்து, மேலும் 2 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

வாகன சோதனை

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் தூத்துக்குடி குடிமைப் பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டை வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தூத்துக்குடி குடிமைப் பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையிலான போலீசார் புதுக்கோட்டை-சாயர்புரம் தேரி ரோடு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கைது

அப்போது, அங்கு வந்த ஒரு மினிலாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த மினிலாரியில் 50 கிலோ எடை கொண்ட 200 மூட்டைகளில் 10 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் லாரியை ஓட்டி வந்த கன்னியாகுமரி மாவட்டம் வழுக்கன்பாறையை சேர்ந்த மணி மகன் சதீஷ் (35) என்பவரை கைது செய்தனர்.

இது குறித்து தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து 10 டன் ரேஷன் அரிசி மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட சதீசிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், தூத்துக்குடியை சேர்ந்த ரமேஷ், கன்னியாகுமரி மாவட்டம் கானிவிளையை சேர்ந்த முருகன் ஆகியோருக்கு சொந்தமான அரிசியை தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் ரமேஷ், முருகன் ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.


Next Story