வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் நிதி ஒதுக்கீடு


வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் நிதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 17 Jun 2023 12:15 AM IST (Updated: 17 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிராமங்கள் தேர்வு

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2023-24-ம் ஆண்டிற்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் தேரேகால்புதூர் மற்றும் பஞ்சலிங்கபுரம், கிள்ளியூர் ஒன்றியத்தில் முள்ளங்கினாவிளை மற்றும் மத்திகோடு, குருந்தன்கோடு தாலுகாவில் கக்கோட்டுத்தலை மற்றும் முட்டம், மேல்புறம் ஒன்றியத்தில் மாங்கோடு மற்றும் விளவங்கோடு ஆகிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல முன்சிறை ஒன்றியத்தில் விளாத்துறை மற்றும் தூத்தூர், ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் புத்தேரி, ஆத்திகாட்டுவிளை மற்றும் மேலகிருஷ்ணன்புதூர், திருவட்டார் ஒன்றியத்தில் செறுகோல் மற்றும் ஏற்றக்கோடு, தோவாளை தாலுகாவில் தோவாளை, மாதவலாயம் மற்றும் கடுக்கரை, தக்கலை ஒன்றியத்தில் சடையமங்கலம் ஆகிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு முன்னுரிமை

தோட்டக்கலை பயிர்களின் பரப்பு விரிவாக்கம் இனத்தின் கீழ் உத்தேச இலக்கு 12 எக்டர் பரப்பளவிற்கு ரூ.2 லட்சத்து 16 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வினத்தின் கீழ் மா, கொய்யா, சப்போட்டா, நாவல், சீத்தா, எலுமிச்சை போன்ற நடவுச் செடிகள் மற்றும் இதர இடுபொருட்கள் வழங்கப்படும். ஒரு பயனாளி அதிகபட்சமாக 4 எக்டர் வரை பயன் பெறலாம். சிறு, குறு, பெண், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.

சந்தைகளில் காய்கறிகள் வரத்தினை அதிகரிக்க காய்கறி சாகுபடியை ஊக்குவித்தல் இனத்தின் கீழ் உத்தேச இலக்கு 46 எக்டர் பரப்பளவிற்கு ரூ.3 லட்சத்து 45 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயனாளிக்கு தரமான விதைகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படும். ஒரு பயனாளி அதிகபட்சமாக 2 எக்டர் வரை பயன் பெறலாம். சிறு, குறு, பெண், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.

ஊட்டச்சத்து தன்னிறைவை மேம்படுத்த பழச்செடி தொகுப்புகள் வழங்குதல் ரூ.8 லட்சத்து 55 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மா, நெல்லி, பப்பாளி, முள்சீத்தா, மாதுளை போன்ற 5 வகையான பழச்செடி தொகுப்பு மட்டுமே வழங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டங்களை பற்றி மேலும் தகவலறிய விரும்பும் விவசாயிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story