ஒகேனக்கல்லில் விநாயகர் சிலைகள் கரைக்க தடை


ஒகேனக்கல்லில் விநாயகர் சிலைகள் கரைக்க தடை
x

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

தர்மபுரி

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விழா

தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று (புதன்கிழமை) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி ஆண்டுதோறும் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலையை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தி சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று ஒகேனக்கல் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த விநாயகர் சிலைகளை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரைக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

முழு ஒத்துழைப்பு

இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து கொண்டே வருவதாலும், இந்த நீர் வரத்தானது 2 லட்சம் கன அடிக்கும் மேல் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீரினால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாதுகாப்பு கருதி விநாயகர் சிலைகளை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரைப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story