தூத்துக்குடியில் 100 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடியில் 100 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் 100 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதை தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யவும், அதனை ஊர்வலமாக எடுத்துசென்று கரைக்கவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர். அதனை தனிநபராக சென்று நீர்நிலைகளில் கரைத்து வந்தனர்.
சிலைகள்
இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டு உள்ளது. இதனால் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இன்று (புதன்கிழமை) விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. இதற்காக பல்வேறு விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. மாவட்டம் முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. தூத்துக்குடி மாநகரில் இந்து முன்னணி சார்பில் சுமார் 100 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
இதில் தாளமுத்துநகரில் 9 அடி உயர பிரமாண்டமான விநாயகர் சிலையும், 3 அடிக்கு மேல் உயரம் கொண்ட 60 சிலைகளும், அதனை விட சிறிய சிலைகள் 40-ம் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. இதனை தொடர்ந்து வழிபாடுகள் செய்து, நீர் நிலைகளில் கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.