சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - அதிகாரிகள் நடவடிக்கை


சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - அதிகாரிகள் நடவடிக்கை
x

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ. 3 கோடி மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போதும் எதுவும் இல்லை.

பின்னர் 2 பேரும் வைத்திருந்த கைப்பை வழக்கத்தை விட அதிக எடையுடன் இருந்ததால் அவற்றை சோதனை செய்தனர். அப்போது கைப்பையில் ரகசிய அறைகள் வைத்து அதில் 100 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர்.

2 பேரிடம் இருந்து 68 தங்க கட்டிகளை கைப்பற்றினார். ரூ. 3 கோடியே 32 லட்சம் மதிப்புள்ள 6 கிலோ 800 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 வாலிபர்களை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் கடத்தல் பிண்ணனியில் உள்ளவர்கள் யார்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story