தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
துரைப்பாக்கம் பழைய மகாபலிபுரம் சாலை சிக்னல் அருகே தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னை பாரிமுனையில் இருந்து துரைப்பாக்கம் கண்ணகி நகருக்கு நேற்று மாநகர பஸ் ஒன்று சென்றது. பஸ்சை டிரைவர் சுகுமார் என்பவர் ஓட்டி வந்தார். பஸ்சில் கண்டக்டராக வேலு இருந்தார். மாநகர பஸ் துரைப்பாக்கம் பழைய மகாபலிபுரம் சாலை சிக்னல் அருகில் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவர் பிரேக்கை அழுத்தியபோது, பிரேக் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் நிலைத்தடுமாறி சென்றது.
இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். உடனே சுதாரித்த டிரைவர் சுகுமார் பஸ்சை சாலையோரம் இருந்த அணுகு சாலையில் திருப்பினார். இந்த நிலையில் பஸ் சாலையோரம் உள்ள தடுப்பு சுவற்றில் மோதி நின்றது. இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. பயணிகள் மற்றும் இதர வாகன ஓட்டிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பின் போக்குவரத்து போலீசார் உதவியுடன் இழுவை வாகனம் கொண்டு வந்து பஸ்சை அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது. இச்சம்பவத்தால் துரைப்பாக்கம் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.