ராஜ்பவனை கவர்னர் ஆர்.என்.ரவி அரசியல் பவனாக மாற்றி வருகிறார் ; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்
ராஜ்பவனை கவர்னர் ஆர்.என்.ரவி அரசியல் பவனாக மாற்றி வருகிறார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தனி தீர்மானத்தை கொண்டுவந்தார். முதல்-அமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் முன்மொழிந்தார். தமிழ்நாடு கவர்னருக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு, குடியரசு தலைவரை வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
மேலும் சட்டப்பேரவையில் உள்ள கவர்னர் தொடர்பான சில பதங்களை நிறுத்திவைத்தும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கவர்னருக்கு எதிரான தீர்மானத்துக்கு நான்கில் மூன்று பங்கு ஆதரவு வேண்டும் என்பதால், சட்டப்பேரவையின் கதவுகள் மூடப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது.
வாக்கெடுப்பின் இறுதியில் 144 பேர் கவர்னருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரித்து வாக்களித்தனர். 2 எம்.எல்.ஏக்கள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். நடுநிலை யாரும் வகிக்கவில்லை. ஆதலால் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சட்டசபையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கவர்னருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்,
நாள்தோறும் ஒரு கூட்டம், நாள்தோறும் ஒரு விமர்சனம் என்ற நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றி வருகிறார். வகுப்புவாத எண்ணம் கொண்ட சிலரது ஊதுகுழலாக கவர்னர் செயல்படுகிறார்
கவர்னருக்கு அரசியல் சட்டம் தெரியவில்லை என நான் கூற மாட்டேன். ஆனால், அவரது அரசியல் விசுவாசம், அரசியல் சட்ட விசுவாசத்தை விழுங்கிவிட்டது.
அதனால்தான், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளையும் மீறி அரசின் அமைச்சரவை கொள்கைகளை மீறி பொதுவெளியில் பேசுகிறார்.
பிரதமர் தமிழ்நாடு வரும் போதோ அல்லது பிரதமரை சந்திக்க நான் டெல்லி செல்லும் போதோ, தமிழ்நாடு அரசுக்கு எதிராக பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி.
தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நண்பராக இருப்பதற்கு தயாராக இல்லை என்று, பதவியேற்ற நாளில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி செய்யும் செயல்கள் வெளிப்படுத்தி வருகிறது' என்றார்.