கவர்னர் ஆர்.என். ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் - வைகோ


கவர்னர் ஆர்.என். ரவி  மன்னிப்பு கேட்க வேண்டும் - வைகோ
x

தேசப்பிதா மகாத்மா காந்தியை இழிவுபடுத்திய கவர்னர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 127-வது பிறந்த நாள் விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, நேதாஜிக்கு பெருமை சேர்க்கிறோம் என்ற பெயரில், மாவீரர் நேதாஜியின் வரலாற்றையே சிறுமைப்படுத்தி பேசியிருக்கிறார்.

2-ம் உலகப் போருக்குப் பின்பு 1942-ல் மகாத்மா காந்தி தொடங்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கம் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை.நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவம் பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போரிட்டதால் தான் ஆங்கிலேயர்கள் நாட்டுக்கு விடுதலை அளிக்கின்ற நெருக்கடிக்கு உள்ளானார்கள் என்று கவர்னர் தனது உரையில் குறிப்பிட்டு இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இந்திய தேசிய ராணுவத்தை கட்டி எழுப்பிப் போர் பிரகடனம் செய்த மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தாம் உருவாக்கிய படைப்பிரிவுகளுக்கு காந்தி ரெஜிமெண்ட், நேரு ரெஜிமெண்ட், ஆசாத் ரெஜிமெண்ட் என்று பெயர்களை சூட்டினார்.

இந்திய தேசிய ராணுவம், ஐ.என்.ஏ. போர்முனையில் நின்ற போது, 1944 செப்டம்பர் 22-ம் நாள் மாவீரர் நேதாஜி வீரமுழக்கமிட்ட உரையில் "தேசப்பிதாவே! மகாத்மாவே! இந்தியாவின் விடுதலைக்கான இந்த புனிதப் போரில் எங்களுக்கு உங்களின் மேலான ஆசியை தாருங்கள்; வாழ்த்துக்களை வழங்குங்கள்" என்று மானசீகமாக மகாத்மா காந்திக்கு வேண்டுகோள் வைத்து ஆற்றிய உரை நெஞ்சத்தை நெக்குருக செய்யும் உணர்ச்சியின் வெளிப்பாடு ஆகும்.தேசப்பிதா மகாத்மா காந்தியை இழிவுபடுத்திய கவர்னர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story