முன்பதிவு இணையதள குளறுபடியால் பணத்தை இழக்கும் அரசு பஸ் பயணிகள்


முன்பதிவு இணையதள குளறுபடியால் பணத்தை இழக்கும் அரசு பஸ் பயணிகள்
x

அரசு விரைவு போக்குவரத்து கழக இணையதள சேவை குளறுபடியால் பயணிகள் பணத்தை இழந்து ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

வேலூர்

அரசு விரைவு போக்குவரத்து கழக இணையதள சேவை குளறுபடியால் பயணிகள் பணத்தை இழந்து ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

இணையதள குளறுபடி

வேலூரில் இருந்தும், வேலூர் வழியாகவும் தென் மாவட்டங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப் பட்டு வருகின்றன. திருப்பதியில் இருந்து வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர் கோவில், திருச்செந்தூர் மற்றும் சேலம் வழியாகவும் அரசு விரைவு பஸ்கள் இயங்கி வருகின்றன.

இந்த பஸ்களில் பயணம் செய்ய பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்கின்றனர். பயணத்தை முன்கூட்டியே உறுதி செய்யும் வகையில் முன்பதிவு செய்ய தொடங்கப் பட்ட இணைய தளம், பஸ்கள் வரும் நேரம் குறித்து சரியான தகவலை தெரிவிப்பது இல்லை. மாலை 5.15 மணிக்கு வேலூர் வரும் என குறிக்கப்பட்டுள்ள செங்கோட்டை செல்லும் பஸ் 6.30 மணிக்குத்தான் பஸ்நிலையத்திற்கு வருகிறது. சுமார் 1¼ மணிநேரம் முன்னதாக இணையதளத்தில் குறிப்பிட்டு உள்ளது. இது போன்று முன்பதிவு செய்யும் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.

பணத்தை இழக்கும் பயணிகள்

வேலூர் பஸ் நிலையத்தில் அரசு விரைவு பஸ்களில் பயணத்திற்கு முபதிவு செய்ய வசதிகள் ஏற்படுத்த வில்லை. இதனால் சாமானிய மக்கள் நேரடியாக பஸ்நிலையம் வந்து முன்பதிவு செய்ய முடியவில்லை. இதனால் தனியார் டிராவல்ஸ் ஏஜன்சிகள் மூலம் அதிக பணம் கொடுத்து முன்பதிவு செய்கின்றனர். கணினி அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே இணைய தளம் மூலம் முன்பதிவு செய்ய முடிகிறது.

அதிலும், பல நேரங்களில் இருக்கைகள் முன்பதிவு உறுதி செய்யப்பட்ட விவரங்களை இணையதளம் உடனடியாக தெரிவிப்பது இல்லை. இதனால் குளறுபடி ஏற்பட்டு, பயணிகள் பணத்தை இழந்து வருகின்றனர்.

பதில்கூறாத அலுவலர்கள்

குளறுபடிகள் மற்றும் பண இழப்பு குறித்து, பஸ்நிலையத்தில் உள்ள பொறுப்பார்களிடமோ அல்லது மேலதிகாரிகளிடமோ கேட்டால், ஆன் லைன் மூலம் நடக்கும் குளறுபடிகளுக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. இணைய தளத்தில் உள்ள சேவை மைய எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் என கூறி விடுகின்றனர். சேவை மைய எண்களை தொடர்பு கொண்டார் ஒலித்து கொண்டே இருக்கிறதே தவிர யாரும் எடுப்பதில்லை.

பூனைக்கு யார் மணிகட்டுவது என்பது போல், இணையதள குளறுபடிக்கு யார்தான் தீர்வு காண்பது என தெரியவில்லை. இதனால் பயணிகள் அவஸ்தை தொடர்கிறது.


Related Tags :
Next Story