காதல் தொல்லையால் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை
மார்த்தாண்டம் அருகே காதல் தொல்லையால் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். தொல்லை கொடுத்த இன்னொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே காதல் தொல்லையால் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். தொல்லை கொடுத்த இன்னொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
பட்டதாரி பெண்
மார்த்தாண்டம் அருகே உள்ள மருதங்கோடு இலங்கன்விளையை சேர்ந்தவர் சத்தியராஜ் (வயது 56), எலக்ட்ரீசியன். இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உண்டு. 2-வது மகள் திவ்யா (20) கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் படித்து விட்டு, மேற்படிப்பு படிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தது.
இந்த நிலையில் திவ்யாவை மருதங்கோடு இலுப்பவிளையை சேர்ந்த ரெஞ்சித் (20) என்ற வாலிபர் காதலிப்பதாக கூறி, நெருக்கமாக இருப்பது போல் புகைப்படம் எடுத்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
காதல் தொல்லை
அதைத்தொடர்ந்து திவ்யாவை அவரது பெற்றோர் இனயத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கி படிக்க ஏற்பாடு செய்தனர். அப்போது திவ்யாவுக்கு அதே பகுதியை சேர்ந்த டிப்ளமோ மெக்கானிக் படித்து வரும் செர்லின் புரூஸ் (19) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் திவ்யாவை ரெஞ்சித் சந்தித்து, தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. அதற்கு திவ்யா எந்த பதிலும் கூறவில்லை என்றும் கூறப்படுகிறது.
சமூக வலைத்தளத்தில் படம்
இதற்கிடையே ெரஞ்சித்துடன் திவ்யா நெருக்கமாக இருக்கும்படி எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ெரஞ்சித் பரவ விட்டார். இதனால் திவ்யா அதிர்ச்சி அடைந்து நடந்த சம்பவங்களை தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
அதைத்தொடர்ந்து திவ்யா சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டுக்கு வந்தார். இதை அறிந்த செர்லின் புரூஸ், திவ்யாவிடம் ரெஞ்சித்தை சந்திக்க சென்றாயா? என கேட்டு, தகாத வார்த்தைகள் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் திவ்யா மனம் உடைந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் திவ்யா நேற்று முன்தினம் மதியம் வீட்டின் முதல் மாடியில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து திவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ரெஞ்சித் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் விசாரணை நடத்தினார். அப்போது திவ்யாவுடன் கடைசியாக செர்லின் புரூஸ் பேசியதாக தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவரை பிடித்து விசாரித்த போது, திவ்யாவை காதலித்து வந்ததாகவும், ரெஞ்சித்தை சந்திக்க சென்றாயா? என கேட்டு தகராறு செய்ததும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து செர்லின் புரூசை போலீசார் கைது செய்தனர்.திவ்யாவுக்கு காதல் தொல்லை கொடுத்த ரெஞ்சித்தை போலீசார் தேடி வருகிறார்கள். இரு வாலிபர்களின் காதல் தொல்லையால் பட்டதாரி பெண் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.