குரூப்-1 முதன்மைத் தேர்வு தொடங்கியது நாளை மறுதினம் வரை நடக்கிறது


குரூப்-1 முதன்மைத் தேர்வு தொடங்கியது நாளை மறுதினம் வரை நடக்கிறது
x

2 ஆயிரம் பேர் எழுதும் குரூப்-1 முதன்மைத் தேர்வு நேற்று தொடங்கியது. நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெற உள்ளது.

சென்னை,

துணை கலெக்டர், கூட்டுறவு சங்க துணை பதிவாளர் உள்ளிட்ட குரூப்-1 பதவிகளில் வரும் 95 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது. குரூப்-1 பதவிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய, முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

அந்த வகையில் முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு (2022) நவம்பர் மாதம் 19-ந் தேதி நடந்தது. இந்த தேர்வை ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் எழுதினார்கள். இவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த ஏப்ரல் மாதம் 28-ந்தேதி வெளியானது. அதில் தேர்ச்சி பெற்றவர்களில் 1,333 ஆண்கள், 780 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 113 பேர் முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கான ஹால் டிக்கெட்டையும் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.

தகுதித் தாள்

அதன்படி, 95 பணியிடங்களுக்கு 2 ஆயிரத்து 113 பேர் போட்டியிடுகின்றனர். அதாவது ஒரு இடத்துக்கு 22 பேர் முட்டி மோதுகின்றனர். முதன்மைத் தேர்வு மொத்தம் 4 தாள்களை கொண்டது. இதில் முதல் தாள் கட்டாய தமிழ்த் தகுதித் தேர்வாகும். இந்த தேர்வு நேற்று சென்னையில் மட்டும் அமைக்கப்பட்டு இருந்த 22 மையங்களில் நடந்தது. தேர்வை எழுத வந்த தேர்வர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

கட்டாய தமிழ் தாள் தேர்வு வெறும் தகுதித் தேர்வு என்பதால், அதில் 40 மதிப்பெண்கள் எடுத்தாலே போதுமானது. அந்த வகையில் தகுதி பெறும் அளவிலேயே வினாக்கள் கேட்கப்பட்டு இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.

750 மதிப்பெண்

இதனைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல், நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) வரை பொதுப் பாடங்களுக்கான தேர்வாக நடைபெற உள்ளது. இந்த 3 தாள்களும் சேர்த்து 750 மதிப்பெண்ணுக்கு (ஒவ்வொரு தாளும் 250 மதிப்பெண்) தேர்வு நடக்க உள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்தகட்டமாக நேர்முகத் தேர்வை எதிர்கொள்வார்கள்.


Next Story