பசுமை தீர்ப்பாயம் வழங்கிய அனுமதி ஆணை நகல் கலெக்டரிடம் ஒப்படைப்பு


பசுமை தீர்ப்பாயம் வழங்கிய அனுமதி ஆணை நகல் கலெக்டரிடம் ஒப்படைப்பு
x

போதமலை மலை கிராமங்களுக்கு செல்ல 34 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை அமைப்பதற்காக தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய அனுமதி ஆணையின் உண்மை நகல் கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் ஒப்படைக்கப்பட்டது.

நாமக்கல்

நாமக்கல்:

சாலை வசதி

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது போதமலை. இந்த மலையில் கீழுர், மேலூர், கெடமலை ஆகிய குக்கிராமங்கள் உள்ளன. கீழுர் ஊராட்சிக்கு வடுகம் முதல் மேலூர் வரை மற்றும் புதுப்பட்டி முதல் கெடமலை வரை வனப்பகுதி வழியாக, புதிய சாலை அமைக்க நில அளவீடு செய்யும் பணி முடிக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள மலை கிராமங்களில் 3,500-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இந்த நிலையில் போதமலையில் உள்ள கீழூர், மேலூர், கெடமலை கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்த நிலையில், சாலை அமையும் இடம் வனப்பகுதியாக இருப்பதால், அனுமதி கிடைக்காத நிலை இருந்தது. இதற்கிடையே முதல்-அமைச்சரின் தீவிர முயற்சியால் போதமலைக்கு சாலைவசதி அமைத்துத்தர முதற்கட்டமாக சுப்ரீம் கோர்ட்டு பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட சிறப்பு வக்கீல் நியமிக்கப்பட்டு துரிதமாக பணிகள் நடைபெற்றன. நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் புதுடெல்லிக்கு சென்று உரிய ஆவணங்களை சமர்பித்தனர்.

கலெக்டரிடம் ஒப்படைப்பு

அதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டில் கீழ் செயல்படும் தேசிய பசுமை தீர்ப்பாயம் போதமலையில் உள்ள கீழூர், மேலூர் மலைக் கிராமங்களுக்கு 34 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்க அனுமதி வழங்கி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய அனுமதி ஆணையின் உண்மை நகலை சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் வழங்கினர்.

இதன்படி போதமலை கீழூர், மேலூர் மலைக் கிராமங்களுக்கு வடுகத்திலிருந்து 23.65 கி.மீ. நீளத்திற்கும், ஆர்.புதுப்பட்டியிலிருந்து கெடமலைக்கு 11.37 கி.மீ. தொலைவிற்கும் சாலை அமைக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் மலைவாழ் மக்களின் 75 ஆண்டுகளாக கனவு நிறைவேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Next Story