அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் கனமழை...! வானிலை மையம் எச்சரிக்கை


அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் கனமழை...! வானிலை மையம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 19 Jun 2023 2:00 PM IST (Updated: 19 Jun 2023 2:03 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழையின் போதே மழை பொழிவு அதிகமாக இருக்கும்.

சென்னை

சென்னையில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வந்தது. அக்கினி நட்சத்திர காலம் முடிந்த போதும் வெயிலின் தாக்கம் கொடூரமாக இருந்தது.

மக்கள் வீடுகளை விட்டு வெளியே போவதற்கே அஞ்சும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்துக் கொண்டு இருந்தது. நேற்று காலை முதல் சென்னை மற்றும் சுற்றியுள்ள இடங்களில் நல்ல மழை பெய்து கொண்டு வருகிறது.

இன்று காலை முதல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனையொட்டி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டையில் இன்று (19.06.2023) பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழையின் போதே மழை பொழிவு அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கும் போதே சென்னையில் அதிக அளவில் மழை பெய்துள்ளது.

இதற்கு முன்பு 1991-ம் ஆண்டு சென்னையில் ஜூன் மாதம் அதிக அளவில் மழை பெய்தது. அதன் பிறகு 1996-ம் ஆண்டு சென்னையில் ஜூன் மாதத்தில் அதிகமாக மழை பெய்தது. இந்த நிலையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஜூன் மாதத்தில் அதிக மழை பெய்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை ஜூன் மாதத்தில் நேற்று வரை இயல்பாக 1.6 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் நேற்று ஒரே நாளில் 3 மடங்கு அதிகமாக மழை பெய்துள்ளது.

இன்றும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் சென்னையின் திடீர் வானிலை மாற்றம் மற்றும் மழை குறித்து பதிவிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள தகவலில் கூறி இருப்பதாவது:-

"27 ஆண்டுகளுக்குப் பிறகு (வரலாற்றுச் சிறப்புமிக்க 1996 முதல்), சென்னையில் ஜூன் மாதம் பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டது.

1991, 1996க்கு பிறகு இப்போது 2023ல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. இது இடியுடன் கூடிய மழையால் அல்ல, இது கடலில் இருந்து நகரும் மேகங்களிலிருந்து ஆகும்.

வரலாறு காணாத வெப்பத்துக்குப் பிறகு, இதுபோன்ற மழையை இயற்கை ஈடுசெய்கிறது என்று சொல்லி வருகிறோம். இன்னும் கடலில் இருந்து மேக மூட்டத்துடன் மழை பெய்வது கனவாக உள்ளது. 1996க்குப் பிறகு ஜூன் மாதம் பள்ளிகளுக்கு, கிட்டத்தட்ட ஒரு வாரம் விடுமுறை கிடைத்தது.

2கே குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள், ஜூன் மாதத்தில் கடுமையான வெப்பம் மற்றும் இப்போது கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் சராசரியாக சென்னைக்கு 55 மி.மீட்டர் கிடைத்து உள்ளது. சில இடங்களில் 6 மணி நேரத்திற்குள் ஒரே நாளில் 3 மடங்கு கிடைத்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story