தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்


தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 28 March 2023 6:45 PM GMT (Updated: 28 March 2023 6:45 PM GMT)

ஊதிய உயர்வு கோரி தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பூங்காக்களில் பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

நீலகிரி

ஊட்டி,

ஊதிய உயர்வு கோரி தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பூங்காக்களில் பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

உண்ணாவிரத போராட்டம்

நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறையில் பணியாற்றி வரும் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களின் சிறப்பு காலமுறை ஊதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும். பண்ணை பணியாளர்களுக்கு ஓய்வூதியம், தொகுப்பு நிதி, பணிக்கொடை வழங்க வேண்டும். தினசரி ரூ.400 ஆக உள்ள ஊதியத்தை ரூ.700 ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23-ந் தேதி முதல் தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் மரத்திடம் மனு அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று தங்களது கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பூங்கா மலர் மாடம் பகுதியில் தரையில் அமர்ந்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் சுழற்சி முறையில் பணியாளர்கள் கலந்துகொள்ள போவதாக அறிவித்து உள்ளனர்.

பணிகள் பாதிப்பு

தோட்டக்கலைத்துறையினர் தினக்கூலியாக 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளனர். நேற்று 6-வது நாளாக தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் மலர் செடிகளுக்கு தண்ணீர் தெளிப்பது, களை எடுப்பது, தூய்மை, பராமரிப்பு என அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் தோட்டக்கலை பண்ணைகளிலும் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. போராட்டம் தொடர்ந்தால் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சிக்கான முன்னேற்பாடு பணிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.


Related Tags :
Next Story