கேமராவில் வேட்டை நாய்கள் சிக்கின
தக்கலை அருகே சிறுத்தையை கண்காணிக்க வைக்கப்பட்ட கேமராவில் வேட்டை நாய்கள் சிக்கின
தக்கலை,
வேளிமலை வனச்சரக அலுவலர் அதியமான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த 17-ந் தேதியன்று தக்கலை அருகே கல்லாம் பொற்றை பகுதியில் வசித்து வரும் விவசாயி ஜோசப் சிங் என்பவரின் வீட்டில் வளர்த்து வந்த 2 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்றது. இதனை சிறுத்தை கடித்திருக்கலாம் என்ற தகவல் பரவியது. இதனை தொடர்ந்து சரல்விளை பகுதியில் 2 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சிறுத்தை நடமாட்டம் ஏதும் தென்படுகிறதா? என கண்காணிக்கப்பட்டு வந்தது. மேலும் மாவட்ட வன அதிகாரி இளையராஜா மற்றும் வேளிமலை வனச்சரக பணியாளர்கள், வனஉயிரினக்காப்பாளர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது சிறுத்தை நடமாட்டத்திற்கான எவ்வித தடையமும் கிடைக்கவில்லை. மேலும் அந்த பகுதியில் சிறுத்தையை பிடிப்பதற்கான கூண்டு உடனடியாக வரவழைக்கப்பட்டு நிறுவப்பட்டதுடன் மொத்தம் 10 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.இந்தநிலையில் விவசாயி ஜோசப் சிங் வீட்டில் ஆடுகள் இறந்த இடத்தின் அருகே வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் வேட்டை நாய்களின் புகைப்படங்கள் பதிவாகி உள்ளன. மேலும் இந்த நாய்களின் உரிமையாளர்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.