அனைத்து தரப்பினரும் பயன் பெறும் வகையில் 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றங்கள்


அனைத்து தரப்பினரும் பயன் பெறும் வகையில் 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றங்கள்
x
திருப்பூர்


அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் 100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆட்கள் பற்றாக்குறை

விவசாயத்தொழிலில் கூலி ஆட்கள் பற்றாக்குறை என்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது. இந்த நிலையில் சிறு,குறு விவசாயிகளின் நிலங்களில் 100 நாள் வேலை எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மூலம் வரப்பு கட்டுதல், வட்டப்பாத்தி அமைத்தல், மண் புழு உரத்தொட்டி அமைத்தல் உள்ளிட்ட குறிப்பிட்ட சில வேலைகள் செய்யப்படுகிறது. இதற்கென ஊராட்சி நிர்வாகங்களில் பதிவு செய்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் 100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் இந்த திட்டத்தில் அனைத்து தரப்பு விவசாயிகளும் பயன்பெறும் வகையில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு குறைந்த பட்சம் 100 நாட்களாவது வேலை கிடைக்க வேண்டும். அதனடிப்படையில் அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்படும் என்ற வகையில் இந்த திட்டம் வரவேற்கப்பட வேண்டியதாகும்.

தனி செயலி

அதேநேரத்தில் விவசாயத்தொழில் நிறைந்த உடுமலை, மடத்துக்குளம் போன்ற பகுதிகளில் விவசாயிகளை பாதிக்காத வகையில் 100 நாள் வேலைத்திட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியமாகும். தற்போது 5 ஏக்கருக்குள் வைத்துள்ள சிறு,குறு விவசாயிகளின் நிலங்களில் குறிப்பிட்ட சில விவசாயப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மீண்டும், மீண்டும் குறிப்பிட்ட சில விவசாயிகளின் நிலங்களிலேயே பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. வெட்டிய வரப்பையே வெட்டுவது, கட்டிய பாத்தியையே கட்டுவது என பணிகள் நடப்பதால் பெருமளவு நிதி வீணடிக்கப்படுகிறது. அதேநேரத்தில் பெரிய விவசாயிகள் வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் தவிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே அனைத்து விவசாயிகளின் நிலங்களிலும் 100 நாள் வேலைத்திட்டப்பணியாளர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்து விதமான விவசாயப்பணிகளையும் 100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்படுவது தவிர்க்கப்படுவதுடன் அரசு நிதியும் வீணாகாமல் தவிர்க்க முடியும். மேலும் 100 நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் உழவன் செயலி போல தனி செயலி உருவாக்கி அதன் மூலம் விவசாயிகள் பதிவு செய்யும் வசதி உருவாக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை, பணிக்காகப்பதிவு செய்துள்ள விவசாயிகள், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், அதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், ஒதுக்கப்பட்ட நிதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அனைவரும் அறியும் வகையில் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


Next Story