"கருவூலத்தில் ரூ.1¾ கோடி முறைகேடு செய்து மகளின் சிகிச்சைக்கு செலவழித்தேன்"-கைதான கருவூல கணக்கர் வாக்குமூலம்


தினத்தந்தி 22 Feb 2023 6:45 PM GMT (Updated: 22 Feb 2023 6:46 PM GMT)

கரூவூல கணக்கர் ரூ.1 கோடியே 88 லட்சம் கையாடல் செய்த விவகாரத்தில், தனது மகளின் சிகிச்சைக்காக அந்த பணத்தை கையாடல் செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ராமநாதபுரம்

கரூவூல கணக்கர் ரூ.1 கோடியே 88 லட்சம் கையாடல் செய்த விவகாரத்தில், தனது மகளின் சிகிச்சைக்காக அந்த பணத்தை கையாடல் செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ரூ.1¾ கோடி மோசடி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சார்நிலை கருவூலத்தில் கணக்கராக பணிபுரிந்தவர், முனியசாமி (வயது 45). இவரது சொந்த ஊர், முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் ஆகும். இவர் கருவூல அலுவலகத்தில் ஓய்வூதிய கணக்கில் இருந்து ரூ.1 கோடியே 88 லட்சம் வரை மோசடி செய்தது தணிக்கையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடிவந்தனர். அவர் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், இந்த கையாடலில் முனியசாமியின் மனைவி கண்ணகி மற்றும் சிலருக்கு தொடர்பு இருப்பதும் அவர்களின் வங்கி கணக்கிற்கு பணம் சென்றுள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து, முனியசாமியின் மனைவியும், ராமநாதபுரம் முன்னாள் படைவீரர் நலஅலுவலக ஊழியரான கண்ணகி, முனியசாமியின் தங்கை கணவர் கண்ணன், நண்பரான எஸ்.வி.மங்கலம் ஜீவா ஆகியோரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோர்ட்டில் சரண்

இந்த நிலையில் முனியசாமி கடந்த 9-ந் தேதி மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு வழக்கு தொடர்பாக போலீசார், ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண் 2-வது கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 3 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

இதன்படி முனியசாமியை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணையில் முனியசாமி போலீசாரிடம் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். அது பற்றிய விவரமாவது:-

ரத்தபுற்றுநோய்

மேற்கண்ட முனியசாமிக்கு மகாமதி என்ற மகள் உள்ள நிலையில், அவளுக்கு 2 வயதாக இருந்தபோது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தபோது ரத்தபுற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை குணமாக்க உடலில் மூளை, கண் தவிர அனைத்து உறுப்புகளில் உள்ள ரத்தசெல்களை அகற்றி தொப்புள் கொடியில் இருந்து பெறப்படும் ஸ்டெம்செல்கள் செலுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கு ரூ.80 லட்சம் வரை செலவாகும் என்று தெரிவித்துள்ளனர்.

அந்த சமயத்தில் கன்னியாகுமரி பகுதியில் ஒருவர் கருவூலத்தில் பணத்தினை கையாடல் செய்ததை அறிந்த முனியசாமி, அதேபாணியில் கையாடல் செய்ய முடிவு செய்தார். இதற்காக அவர் தனது மனைவி மற்றும் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் மகளின் மருத்துவ சிகிச்சைக்கு சிலர் பணம் தருகிறார்கள். நான் அரசு ஊழியர் என்பதால் சிக்கல் வரும். எனவே அதனை உங்கள் வங்கி கணக்கில் பெற்று என்னிடம் தாருங்கள் என்று கூறி அதன்படி பெற்றுள்ளார்.

சொத்து ஆவணங்கள்

இந்த பணத்தை வைத்து மகளின் மருத்துவ சிகிச்சையை முடித்த முனியசாமி, மீதம் உள்ள பணத்தில் சொத்துக்கள் வாங்கியதோடு வீடும் கட்டி உள்ளார். சிகிச்சை பெற்றாலும் இயல்பான வளர்ச்சி இல்லாததால், தனது மகள் 7 வயதாகியும் 4 வயது வளர்ச்சியுடன் தான் உள்ளதாகவும், தனது மகள் மீது கொண்ட அதிக பாசத்தின் காரணமாகவே இந்த கையாடலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் அளித்த தகவலின்படி சொத்து ஆவணங்களை கைப்பற்றிய போலீசார், இந்த மோசடியில் உடந்தையாக இருந்த உறவினர் பாலமுருகன், வென்னீர்வாய்க்கால் ஆனந்தவள்ளி, முனியசாமியின் அண்ணன் சித்ரவேலு ஆகியோரை தேடி வருகின்றனர். பின்னர் முனியசாமியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Related Tags :
Next Story