கடலில் மூழ்கி அழிக்கால் மீனவர் பலி


கடலில் மூழ்கி அழிக்கால் மீனவர் பலி
x
தினத்தந்தி 10 Aug 2023 6:45 PM GMT (Updated: 10 Aug 2023 6:45 PM GMT)

கடலில் மீன்பிடிக்க சென்ற போது வள்ளம் கவிழ்ந்து அழிக்கால் மீனவர் பலியானார். 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கன்னியாகுமரி

குளச்சல்:

கடலில் மீன்பிடிக்க சென்ற போது வள்ளம் கவிழ்ந்து அழிக்கால் மீனவர் பலியானார். 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

வள்ளம் கவிழ்ந்தது

குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் ஜோசப் (வயது 52). இவர் சொந்தமாக பைபர் வள்ளம் மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் நேற்று அதிகாலையில் குளச்சலில் இருந்து வள்ளத்தில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றார். அவருடன் அழிக்கால் மேற்கு தெருவை சேர்ந்த ஆன்சல் (63), குளச்சலை சேர்ந்த ஜோசப் பாத் (65), ஏரோணிமூஸ் (65), கோடிமுனையை சேர்ந்த சிலுவை பிச்சை (53), சைமன் காலனியை சேர்ந்த ஆன்ட்ரோஸ் (72) ஆகியோரும் இருந்தனர்.

அங்கு மீன்பிடித்து விட்டு காலையில் கரை திரும்பிக் கொண்டிருந்தனர். குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் வள்ளம் வந்தடைந்த போது திடீரென ராட்சத அலை எழும்பியது. இதில் வள்ளம் தூக்கி வீசப்பட்டு கடலில் கவிழ்ந்தது.

மீனவர் பலி

இதில் பயணம் செய்த மீனவர்களும் கடலில் மூழ்கி தத்தளித்தனர். அந்த சமயத்தில் மீன்பிடிக்க சென்ற மற்றொரு வள்ளத்தில் மீனவர்கள் அங்கு வந்தனர். உடனே கடலில் தத்தளித்த 5 பேரை மீட்டு கரைக்கு கொண்டுவந்து சேர்த்தனர். ஆனால் ஆன்சல் என்ற மீனவரை காணவில்லை. இதனால் அவர் கடலில் மூழ்கியிருக்கலாம் என சக மீனவர்கள் அச்சம் அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ததேயூஸ் குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதனை தொடர்ந்து முத்துக்குளிக்கும் மீனவர்கள் மூலம் கடலில் தேடும் பணி நடந்தது. இந்தநிலையில் ஆன்சல் உடல் கொட்டில்பாடு கடல் பகுதியில் பெரியவிளை மீனவரின் வலையில் சிக்கியது தெரியவந்தது. உடனே போலீசார் பிணமாக கிடந்த ஆன்சலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

கடலில் வள்ளம் கவிழ்ந்து பலியான மீனவர் ஆன்சலுக்கு பெல்லாம்மா (55) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். குளச்சல் கடலில் அழிக்கால் மீனவர் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story