ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்த 225 அரசுப்பள்ளி மாணவர்கள்: முதல்-அமைச்சர் பாராட்டு
நடப்பு கல்வி ஆண்டில் ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்த 225 அரசுப்பள்ளி மாணவர்களை சென்னையில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பாராட்டி மடிக்கணினி வழங்கினார்.
சென்னை,
அரசுப்பள்ளியில் திறமையான மாணவ-மாணவிகளை கண்டறிந்து அவர்கள் உயர்கல்வி நிறுவனங்கள் சேர்ந்து படிப்பதற்கு வசதியாக 'அனைவருக்கும் ஐ.ஐ.டி.' என்ற திட்டத்தின் கீழ் பள்ளிக்கல்வித்துறையால் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் நடப்பு கல்வி ஆண்டில் (2023-24) சென்னை ஐ.ஐ.டி, திருச்சி தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் அரசுப்பள்ளி மாணவர்கள் 225 பேர் சேர்ந்துள்ளனர்.
இவர்களுக்கான இளநிலை பட்டப்படிப்புக்கான முழு செலவையும் மாநில அரசே ஏற்றுக்கொள்கிறது. இந்த மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று பாராட்டு விழா நடந்தது.
மடிக்கணினி
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரவேற்றார். விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 225 மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கிடும் அடையாளமாக 14 பேருக்கு மடிக்கணினி மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் நிர்வாக அமைப்பில் வேறுபாடு கொண்டதாக இருக்கலாம். ஆனால் தரத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களும் ஒரே அளவுகோலோடு தான் இயங்கவேண்டும்.
இந்த நிறுவனங்கள் எல்லோருக்கும் பொதுவான நிறுவனங்களாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட சமச்சீர் நிலையைதான் உருவாக்கி வருகிறோம்.
225 மாணவர்கள் தேர்வு
உயர்கல்விக்கு போகின்ற அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் 'அனைவருக்கும் ஐ.ஐ.டி' என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் 225 அரசுப்பள்ளி மாணவர்கள் நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களில் இந்த ஆண்டு சேருகிறார்கள்.
கடந்த ஆண்டு முதன்மை கல்வி நிறுவனங்களில் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 75. இந்த ஆண்டு 225. இது மிகப்பெரிய சாதனை.
அரசுப்பள்ளி மாணவர்களில் கடந்த ஆண்டு ஐ.ஐ.டி.க்கு போனவர் ஒரே ஒருவர் தான். ஆனால் இந்த ஆண்டு 6 பேர் செல்கிறார்கள்.
தைவான் பல்கலைக்கழகம்
கடந்த ஆண்டு தேசிய தொழில்நுட்ப கழகம், இந்திய தகவல் தொழில்நுட்ப கழகங்கள், தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றிற்கு சென்றவர்கள் 13 பேர். இந்த ஆண்டு 55 பேர் செல்கிறார்கள்.
கல்வி உதவித்தொகையுடன் தைவான் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு 2 அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்வாகி இருக்கிறார்கள்.
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு ஒருவரும் சேராத நிலையில் இந்த ஆண்டு 6 மாணவர்கள் சேர இருக்கிறார்கள். தேசிய சட்ட பல்கலைக்கழகத்துக்கு கடந்த ஆண்டு 4 பேர் சென்ற நிலையில் இந்த ஆண்டு 9 பேர் செல்கிறார்கள்.
சாதனை
தேசிய பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் கடந்த ஆண்டு யாரும் சேராத நிலையில் இந்த ஆண்டு 27 பேர் படிக்க போகிறார்கள். கடந்த ஆண்டு மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கு 6 பேர் படிக்க போனார்கள். இந்த கல்வியாண்டில் 20 பேர் செல்கிறார்கள்.
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஒருவர் கூட சேராத நிலையில் இந்த ஆண்டு அந்த நிலை மாறி 10 அரசுப்பள்ளி மாணவர்கள் செல்கிறார்கள்.
தனியார் பள்ளி மாணவர்களால் மட்டும்தான் இப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு போக முடியும் என்ற எண்ணத்தை உடைத்து இன்றைக்கு அரசுப்பள்ளி மாணவர்களும் போக முடியும் என்ற சாதனையை நீங்கள் படைத்திருக்கிறீர்கள்.
வாய்ப்பை பயன்படுத்த வேண்டும்
இதன்மூலம் அரசுப்பள்ளியின் கல்வித்தரம் உயர்ந்திருக்கிறது என்ற உண்மை உலகுக்கு தெரியவந்திருக்கிறது.
மாணவர்கள் நன்றாக படித்து அரசு ஏற்படுத்தி தருகின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகஷே்குமார், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, இல்லம் தேடி கல்வி சிறப்பு பணி அலுவலர் இளம்பகவத், சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி, தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலாளர் சுதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தைவான் பல்கலைக்கழகத்தில் அரசு பள்ளி மாணவிகள்
தர்மபுரி அரசுப்பள்ளியில் படித்த கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஜெயஸ்ரீ தைவான் நாட்டின் குன்ஷான் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோன்று சென்னையில் உள்ள மாநில தகைசால் அரசுப்பள்ளியில் படித்த மாணவி ஆவல்சிந்து தைவான் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பன்னாட்டு வணிகம் மற்றும் வர்த்தக படிப்பை மேற்கொள்ள தேர்வாகி உள்ளார். இவர்களுக்கான கல்வி செலவு முழுவதையும் தைவான் நாடு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தியாவில் இருந்து தேர்வான மூவரில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனதார பாராட்டினார்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழியை பாராட்டிய முதல்-அமைச்சர்
விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டி பேசினார். அதாவது, 'பள்ளி மாணவர்களான உங்களை மாதிரியே அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியும் எனர்ஜெட்டிக்கா இருக்கிறார். அவரை குழந்தையாக இருக்கின்ற காலத்தில் இருந்து நான் பார்த்துக் கொண்டு வருகிறேன். என் கண் முன்னாடி வளர்ந்த பையன். இன்றைக்கு மாண்புமிகு அமைச்சர் என நான் சொல்கின்ற அளவுக்கு வளர்ந்திருக்கிறார். பள்ளிக்கல்வித்துறையில் அவர் செய்து வரும் பணிகள் தலைமுறை தலைமுறைக்கும் பயனுள்ள பணியாக அமைந்துள்ளது' என பாராட்டினார்.