காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்திற்கு உடனடியாக துணைவேந்தரை நியமனம் செய்ய வேண்டும் - முத்தரசன் வேண்டுகோள்


காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்திற்கு உடனடியாக துணைவேந்தரை நியமனம் செய்ய வேண்டும் - முத்தரசன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 15 Feb 2024 9:14 PM GMT (Updated: 16 Feb 2024 8:25 AM GMT)

நான்கு ஆண்டுகளாக நிரந்தர துணைவேந்தர் இல்லாத நிலையில் பல்கலைக்கழகம் வளர்ச்சி நடவடிக்கைகள் இல்லாமல் இக்கட்டில் சிக்கியுள்ளது என்று முத்தரசன் கூறியுள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் 1959-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் சீடர்கள் ஜி.ராமச்சந்திரன் - டி.எஸ்.சௌந்திரம் ஆகியோரால் காந்தியின் ஆதாரக் கல்வியை நடைமுறைப்படுத்தும் வகையில் கிராமிய கல்வி நிறுவனமாகத் தொடங்கப்பட்டது. கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வியை வழங்கும் இந்த நிறுவனம் 1976-ம் ஆண்டில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் முயற்சியால் மத்திய அரசின் உதவி பெறும் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தப்பட்டது. 1985-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டுவரை துணை ஜனாதிபதிகள் ஆர்.வெங்கட்ராமன் தொடங்கி முகமது அன்சாரி வரை இப்பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பதவி வகித்தனர்.

இதன் பின்னர் பல்கலைக்கழக சட்ட விதிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக மத்திய அரசின் கல்வி அமைச்சகம் தகுதி வாய்ந்த நபர்களை வேந்தராக நியமனம் செய்யும் முறை நடைமுறைக்கு வந்தது. இதன் அடிப்படையில் பிசியோதெரபி மருத்துவரான டாக்டர்.கே.எம்.அண்ணாமலை பல்கலைக்கழக வேந்தராக 2017-ம் ஆண்டில் நியமனம் செய்யப் பெற்றார். தற்போது இரண்டாம் முறையாக பதவி வழங்கப்பட்டு வேந்தராகத் தொடர்கிறார். இவர் வேந்தருக்குரிய அதிகார வரம்பைத் தாண்டி பல்கலைக்கழகத்தின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டுப் பிரச்சினைகளை உருவாக்கினார். தனது பிசியோதெரபி கல்லூரி நண்பர் வி.பி.ஆர்.சிவக்குமாரை பல்கலைக்கழகத்தின் பதிவாளராக நியமனம் செய்ய வைத்து அவர் மூலம் பல்கலைக்கழகத்தின் நிதியை முறைகேடாக செலவழித்தார். இவரால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் புதுடெல்லி மையம் மத்திய தணிக்கைக் குழுவால் விதிகளுக்கு முரணானதாகச் சுட்டப்பட்டு மத்திய கல்வி அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் மூடப்பட்டது.

துணைவேந்தர் பேராசிரியர் சு.நடராஜன் பதவிக் காலம் நவம்பர் 2019-ல் முடிந்த பிறகு 18 மாதங்கள் கழித்து பொருளாதார வல்லுநர் பேராசிரியர் மாதேஸ்வரன் துணை வேந்தராக நியமனம் செய்யப் பெற்றார். இவர் வேந்தரின் முறைகேடான செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு தராததால் மிரட்டப்பட்டு விருப்ப ஓய்வில் செல்ல நிர்ப்பந்தம் செய்யப்பட்டார். நான்கு மாதங்களில் இவர் பதவி விலகிய பின்னர் கூடுதல் பொறுப்பு துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்ட புதுவை மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங்கின் பதவிக் காலம் கடந்த 23.10.2023 தேதியுடன் முடிவடைந்து விட்டது. அதன் பின்னர் மத்திய கல்வி அமைச்சகம் சென்னை ஐ.ஐ.டி. நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் வீ.காமகோடியை கூடுதல் பொறுப்பு துணைவேந்தராக நியமனம் செய்தது.

கூடுதல் பொறுப்பு துணைவேந்தர்களால் அதிக நேரம் ஒதுக்கியும் நேரடியாக பல்கலைக்கழகம் வந்தும் நிர்வாகம் செய்ய இயலவில்லை. இதனால் நிர்வாக தாமதம் ஏற்படுகிறது. முறையான நிரந்தர துணைவேந்தர் கடந்த நான்கு ஆண்டுகளாக இல்லாத நிலையில் பல்கலைக்கழகம் வளர்ச்சி நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் இக்கட்டில் சிக்கியுள்ளது. இச்சிக்கலைத் தீர்க்கும்படி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் மத்திய கல்வி அமைச்சரும் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக புரவல சங்கத்தின் (ஸ்பான்சரிங் சொசைட்டி) தலைவருமான தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அக்கடிதத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தரைத் தெரிவு செய்யும் குழு தனது பரிந்துரையைக் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே அனுப்பிவிட்டது. ஓராண்டு ஆகியும் துணைவேந்தர் இன்னும் நியமனம் செய்யப்படவில்லை. எனவே விரைவில் புதிய துணைவேந்தரை நியமனம் செய்ய வேண்டுமென ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வேந்தரின் விருப்பத்திற்குரிய பேராசிரியரைத் துணைவேந்தரைத் தெரிவு செய்யும் குழு பரிந்துரை செய்யாததால் பிரதமர் அலுவலகத்தில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி துணைவேந்தர் நியமனத்தை தடை செய்து வருவதாக ஆசிரியர் சங்கத்தினர் கோரி வருகின்றனர்.

துணை வேந்தரை நியமனம் செய்யாமல் காலம் தாழ்த்துவது காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தை முடக்கும் செயல் கண்டனத்திற்குரியதாகும். உடனடியாக துணை வேந்தரை நியமனம் செய்திட வேண்டுமென ஒன்றிய கல்வி அமைச்சகத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story