40 மாதங்களில், 9 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்


40 மாதங்களில், 9 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 10 Aug 2023 8:15 PM GMT (Updated: 10 Aug 2023 8:16 PM GMT)

வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 40 மாதங்களில், 9 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல்

வடமதுரை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், தலைவர் தனலட்சுமி பழனிச்சாமி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் தனலட்சுமி கண்ணன் முன்னிலை வகித்தார். இதில், குளத்தூர் ஊராட்சி லட்சுமணபுரத்தில் ரயில்வே பாலம் அருகே தடுப்புச்சுவர் கட்டுவதற்கு சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தில் ரூ.3 லட்சத்து 98 ஆயிரம் வழங்குதல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர்களுக்கு மாத ஊதியம் வழங்குவது போல் ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலும் கவுன்சிலர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும். வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அடிக்கடி பணிமாறுதல் செய்யப்படுகின்றனர். அதன்படி கடந்த 40 மாத காலத்தில் 9 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அடிக்கடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணிமாறுதல் செய்யப்படுவதால் பணிகள் பாதிக்கப்படுவதாக கண்டனம் தெரிவித்து கவுன்சிலர்கள் பேசினர். எனவே ஒரு ஆண்டுக்கு ஒரு வட்டார வளர்ச்சி அலுவலரையாவது முழுமையாக பணிபுரிய வழிவகை செய்ய வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) கீதாராணி வரவேற்றார். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஏழுமலையான் நன்றி கூறினார்.


Next Story