நிலமோசடி வழக்கில் மேலும் 2 பேர் கைது


தினத்தந்தி 24 Feb 2023 12:15 AM IST (Updated: 24 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அருகே நிலமோசடி வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர் அருகே நிலமோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நிலம் மோசடி

தூத்துக்குடி காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த முகமது ஜெமீல் என்பவர் கீழதிருச்செந்தூர் பகுதியில் 4 ஏக்கர் 9 செண்டு நிலத்தை மீரான் சாகிபு என்பவரிடம் இருந்து கிரையம் பெற்று அனுபவம் செய்து வந்து உள்ளார். இந்த முகமது ஜெமீல் 1987-ல் இறந்த பின்பு அந்த சொத்தை அவரது மகன் முகமது நூகு தம்பி மற்றும் அவருடன் உடன்பிறந்தோர் அனுபவம் செய்து வந்தனர். இந்த நிலையில், உடன்குடி, கிறிஸ்டியாநகரம் கோலாப் தெருவை சேர்ந்த ஜெயசிங் மகன் செல்வகுமார் (38) மற்றும் சிலர் சேர்ந்து ரூ10 லட்சம் மதிப்பிலான 4 ஏக்கர் 9 செண்டு நிலத்தை அபகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இறந்துபோன முகமது ஜெமீல் போன்று வேறு ஒருவரை வைத்து ஆள்மாறாட்டம் செய்து செல்வகுமாருக்கு மோசடியாக பவர் பத்திர பதிவு செய்து உள்ளனர். அதில் மந்திரமூர்த்தி மற்றும் ஸ்ரீமுருகன் ஆகியோர் சாட்சியாக கையெழுத்திட்டு உள்ளனர்.

மேலும் 2 பேர் கைது

பின்னர் செல்வகுமார், திருச்செந்தூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு 2021ம் ஆண்டு கிரையம் செய்து கொடுத்து உள்ளார். இதனை அறிந்த முகமது நூகு தம்பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, கடந்த மாதம் செல்வக்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மேலப்பாளையத்தை சேர்ந்த காஜா முகைதீன் மகன் முகமது பாரூக் (53), உடன்குடி காலாங்குடியிருப்பை சேர்ந்த செய்யது அப்பாஸ் மகன் நூர் பிரதௌஸ் (53) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story