த.மா.கா. விவசாயப்பிரிவினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு த.மா.கா. விவசாயப்பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில தலைவர் துவார் சி.ரெங்கராஜன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் திருப்பதி வாண்டையார் வரவேற்றார்.ஆர்ப்பாட்டத்தில், காவிரியில் போதிய தண்ணீர் பெற்று தராததால் திருவாரூர், நாகை மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கரில் குறுவை நெற்பயிர்கள் காய்ந்து கருகிவிட்டது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். மீதமுள்ள குறுவை நெற்பயிரை காப்பாற்ற தமிழகஅரசு உடனடியாக கர்நாடக அரசிடம் பேசி, காவிரியில் விட வேண்டிய ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாத நீர் பங்கீடை உடனடியாக பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.இதில் த.மா.கா. மாநில நிர்வாகிகள் ராஜேந்திரன், திருச்செந்தில், ராம்மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் இவர்கள் அனைவரும் கோரிக்கை மனுவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினர்.