கரூரில் போதையில் தள்ளாடிய பள்ளி மாணவிகள் 3 பேர் மீட்பு
கரூரில் போதையில் தள்ளாடிய பள்ளி மாணவிகள் 3 பேரை மீட்டு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
போதையில் தள்ளாடிய மாணவிகள்
கரூர் சர்ச் கார்னர் பகுதியில் பள்ளி மாணவிகள் 3 பேர் அரை மயக்க நிலையில் தள்ளாடிக் கொண்டிருந்தனர். இதனைக்கண்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ், அங்கு தள்ளாடிக் கொண்டிருந்த 2 மாணவிகளை ஏற்றிக்கொண்டு கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு சென்றது. ஒரு மாணவி சர்ச் கார்னர் பகுதியில் இருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து 2 மாணவிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதியில் மொத்தம் 3 மாணவிகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மற்றொரு மாணவியையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அறிவுரை
விசாரணையில் 3 மாணவிகளும் கரூரில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், தேர்வில் தோல்வியடைந்ததால், மறுதேர்வு எழுத பள்ளி சீருடையுடன், மற்றொரு பள்ளிக்கு சென்று தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு செல்லும்போது 3 பேரும் ஒன்று சேர்ந்துள்ளனர். அப்போது ஒயின் குடித்தால் கலராக மாறலாம் என யாரோ சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு தெரிந்தவர்கள் மூலம் ஒயினை வாங்கி 3 மாணவிகளும் குடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒயினில் போதை வரும் என்று தெரியாமல் குடித்து விட்டு அவர்கள் தள்ளாடியதாக கூறப்படுகிறது.இதனையடுத்து மாணவிகளின் பெற்றோரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து, போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.