கரூரில் போதையில் தள்ளாடிய மாணவிகளுக்கு ஒயின் வாங்கி கொடுத்த வாலிபர் கைது


கரூரில் போதையில் தள்ளாடிய மாணவிகளுக்கு ஒயின் வாங்கி கொடுத்த வாலிபர் கைது
x

கரூரில் போதையில் தள்ளாடிய மாணவிகளுக்கு ஒயின் வாங்கி கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

தள்ளாடிய மாணவிகள்

கரூர் சர்ச் கார்னர் பகுதியில் பள்ளி மாணவிகள் 3 பேர் மதுபோதையில் தள்ளாடிக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் ஆம்புலன்சை வரவழைத்து மாணவிகளுக்கு மயக்கம் தெளிய ஏற்பாடு செய்தனர். பின்னர் அந்த மாணவிகள் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் 3 மாணவிகளும் கரூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகின்றனர். தேர்வில் தோல்வியடைந்ததால், மறுதேர்வு எழுத பள்ளி சீருடையுடன், வேறொரு பள்ளிக்கு சென்றனர்.அங்கு தேர்வை முடித்துவிட்டு, பின்னர் வீட்டிற்கு செல்லும்போது 3 பேரும் ஒன்று சேர்ந்து தங்களுக்கு தெரிந்தவர் மூலம் ஒயின் வாங்கி குடித்ததால் தள்ளாடியது தெரியவந்தது. இதனையடுத்து மாணவிகளின் பெற்றோரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து, மாணவிகளுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

கைது

இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், தேர்வு எழுதிவிட்டு 3 மாணவிகளும் பள்ளியை விட்டு வெளியே வந்தனர். அப்போது ஒரு மாணவியின் ஆண் நண்பரான பசுபதிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்த பெயிண்டர் தினேஷ் என்கிற தீனா (வயது 22) என்பவர், அந்த 3 மாணவிகளையும் மதிய உணவிற்காக அவரது வீட்டிற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.அப்போது தினேஷ், 3 மாணவிகளிடமும், ஒயின் குடித்தால் கலராக மாறலாம் எனக்கூறி, அவர்களுக்கு ரெட் ஒயின் வாங்கி வற்புறுத்தி கொடுத்துள்ளார். அதனால் மாணவிகள் ஒயினை குடித்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து தினேஷ் மீது பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.


Next Story