கோவில்பட்டி பகுதியிலுள்ளகிராமங்களுக்கு சீரான குடிநீர் வினியோகம்:அமைச்சர் கீதாஜீவன், வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்


கோவில்பட்டி பகுதியிலுள்ளகிராமங்களுக்கு சீரான குடிநீர் வினியோகம்:அமைச்சர் கீதாஜீவன், வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 10 Aug 2023 6:45 PM GMT (Updated: 10 Aug 2023 6:45 PM GMT)

கோவில்பட்டி பகுதியிலுள்ள கிராமங்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யவேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன், வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி பகுதியிலுள்ள கிராமங்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் அறிவுறுத்தினார்.

கால்நடை மருத்துவமனை கட்டிடம் திறப்பு

கோவில்பட்டியில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.60½ லட்சம் செலவில் அரசு கால்நடை மருத்துவமனைக்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு மருத்துவமனை புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி, கட்டிடத்தை சுற்றிப் பார்த்தார்.

விழாவில் கால்நடை துறை இணை இயக்குனர் சஞ்சீவிராஜ், உதவி இயக்குனர் விஜயஸ்ரீ, கூடுதல் கலெக்டர் சுபம் ஞானதேவராவ், கோவில்பட்டி உதவி கலெக்டர் கவுரவ்குமார், கோவில்பட்டி நகரசபை தலைவர் கருணாநிதி, பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், யூனியன் ஆணையாளர்கள் ராஜேஷ் குமார், ராணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டம்

முன்னதாக கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் கூட்ட அரங்கில் பஞ்சாயத்து மற்றும் பேரூராட்சி தலைவர்கள், செயலாளர்கள் பங்கேற்ற குடிநீர் பிரச்சினை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கலெக்டர் சுபம் ஞான தேவராவ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு கிராம பகுதிகளில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக பஞ்சாயத்து தலைவர்கள், செயலாளர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

பின்னர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், கிராமப் பகுதிகளில் சீராக குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடிகால் வாரிய அதிகாரிகளை அமைச்சர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் கோவில்பட்டி குடிநீர் வடிகால் வாரிய செயற் பொறியாளர்கள் ராமசாமி, ராஜா, உதவி செயற் பொறியாளர்கள் குமார், மணி, கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்கள் ராஜேஷ் குமார், ராணி மற்றும் பேரூராட்சி, பஞ்சாயத்து தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டார்கள்.


Next Story