பா.ஜனதா மண்டல தலைவர் வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த வாலிபர் தப்பிஓட்டம்-போலீசார் விசாரணை


பா.ஜனதா மண்டல தலைவர் வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த வாலிபர் தப்பிஓட்டம்-போலீசார் விசாரணை
x

சேலத்தில் பா.ஜனதா மண்டல தலைவர் வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து விட்டு தப்பிஓடிய வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

பா.ஜனதாமண்டல தலைவர்

சேலம் குகை செங்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 55). இவர் பாரதீய ஜனதா கட்சியின் குகை மண்டல தலைவராக உள்ளார். இந்த நிலையில் இவரது வீட்டில் இருந்து 50 அடி தூரத்தில் நேற்று மாலை 5.30 மணிக்கு வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து அதை தெருவோரம் நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் அவர் வந்த மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்கை திறந்து அதில் தீக்குச்சியை பற்ற வைத்து போட்டார். அப்போது குபீர் என தீப்பிடித்து மோட்டார் சைக்கிள் எரிந்தது.

பின்னர் அந்த வாலிபர், கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளை காலால் உதைத்து கீழே தள்ளினார். இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் சத்தம் போட்டு உள்ளனர். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அதே நேரத்தில் மோட்டார் சைக்கிள் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

பரபரப்பு

இது குறித்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலர் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது.

இந்த சம்பவம் குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்து விட்டு தலைமறைவான வாலிபர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாரதீய ஜனதா கட்சியின் மண்டல தலைவர் வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்துவிட்டு வாலிபர் தலைமறைவான சம்பவம் நேற்று அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story