மாட்டு பண்ணை ஊழியர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் கைது
திருமங்கலம் அருகே மாட்டு பண்ணை ஊழியர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே மாட்டு பண்ணை ஊழியர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொலை
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது 34). கள்ளிக்குடி அருகே உள்ள அகத்தாபட்டியை சேர்ந்த பாலுச்சாமி என்பவர் சிவரக்கோட்டையில் மாட்டு பண்ணை வைத்துள்ளார். இந்த பண்ணையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் மாரிச்சாமி. கடந்த 18-ந்தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி கொடுத்த புகாரின்பேரில் கள்ளிக்குடி போலீசார் விசாரணை செய்தனர்.
இதற்கிடையே மாரிச்சாமி வேலை பார்த்த பால் பண்ணை தொட்டியில் பிணமாக கிடந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அதில், அங்கு பால் கறவை செய்து வரும் வில்லூரை சேர்ந்த ஆறுமுகம்(19), மேலும் அப்பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஆகியோர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
2 பேர் கைது
இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனா். அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:- பால்பண்ணையில் வேலை செய்த ஆறுமுகம் அடிக்கடி செல்போனை பார்த்து வந்துள்ளார். இதனால் அவரிடம் செல்போன் அதிகமாக பார்க்க கூடாது என ஆறுமுகத்தை மாரிச்சாமி கண்டித்துள்ளார். மேலும் இது தொடர்பாக பால் பண்ணை உரிமையாளர் பாலுச்சாமியிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் மற்றும் 15 வயது சிறுவன் இருவரும் சேர்ந்து மாரிச்சாமியை அடித்து கொலை செய்து விட்டு, அதனை மறைக்க தண்ணீர் தொட்டியில் உடலை வீசி சென்றதாக கூறியுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.