சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தில் அத்துமீறி நுழைந்து எச்சரிக்கை கூண்டை இறக்கிய மீனவர்கள் 12 பேர் மீது வழக்கு


சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தில்   அத்துமீறி நுழைந்து எச்சரிக்கை கூண்டை இறக்கிய மீனவர்கள்  12 பேர் மீது வழக்கு
x
கன்னியாகுமரி

சின்னமுட்டம் மீன்பிடித்துறை முகத்தில் அத்துமீறி நுழைந்து புயல் எச்சரிக்கை கூண்டை இறக்கிய 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மீன்பிடிக்க தடை

கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் மழை மற்றும் புயல் வீச வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து கடந்த சில நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன் வளத்துறை தடை விதித்திருந்தது.

மேலும், மீனவர் நலத்துறை ஆணையர் அலுவலகம் மூலம் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்ததுடன், புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.

எச்சரிக்கை கூண்டை இறக்கினர்

சம்பவத்தன்று 12 பேர் கொண்ட கும்பல் மீன்பிடி துறைமுகத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்த காவலாளிகளை அப்புறப்படுத்தி விட்டு புயல் எச்சரிக்கை கூண்டை இறக்கினர். மேலும், அங்குள்ள பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் 12 பேர் மீது கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story