திருவாரூரில், அரைவட்ட புறவழிச்சாலை பணியை உடனடியாக தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும்


திருவாரூரில் 15 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள அரைவட்ட புறவழிச்சாலை அமைக்கும் பணியை உடனடியாக தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

திருவாரூரில் 15 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள அரைவட்ட புறவழிச்சாலை அமைக்கும் பணியை உடனடியாக தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசல்

தஞ்சையில் இருந்து நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி மாதா பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா ஆகிய ஆன்மிக தலங்களுக்கு திருவாரூர் வழியாக தான் செல்ல வேண்டும். வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் திருவாரூர் வழியாக செல்கின்றன.

மேலும் காரைக்கால் துறைமுகம் செல்லும் கனரக வாகனங்கள், கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்களை ஏற்றி கொண்டு கேரளா செல்லும் வாகனங்கள் என திருவாரூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

புறவழிச்சாலை பணி கிடப்பில் போடப்பட்டது

இந்த நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தண்டலை, காட்டூர், சேந்தமங்கலம் வழியாக கிடாரங்கொண்டான் வரை அரைவட்ட புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு கடந்த 2008-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் பணிகள் தொடங்கப்பட்டது.

இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிலம் ஆர்ஜிதப்படுத்தப்படும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நிலையில் பல்வேறு காரணங்களால் அரை வட்ட புறவழிச்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

மீண்டும் பணியை தொடங்க கோரிக்கை

திருவாரூர் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதில் மயிலாடுதுறை, காரைக்கால் போன்ற பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் நகர் பகுதிக்குள் புகுந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில் மீண்டும் தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் திருவாரூர் அரைவட்ட புறவழிச்சாலை திட்ட பணிகளை உடனடியாக தொடங்கி வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைப்பு

இதனையடுத்து இதற்கான முதற்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை இருவழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலை திருவாரூர் நகருக்குள் வராமல் அரை வட்ட புறவழிச்சாலை வழியை பயன்படுத்திட திட்டமிடப்பட்டது.

அதன்படி புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகளில் மாவட்ட வருவாய் துறையினர் ஈடுபட்டனர். இதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில், ஒரு சில இடங்கள், கோவில் நிலங்களும் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. தற்போது இந்த பணிகள் நிறைவு அடைந்த நிலையில் நெடுஞ்சாலை துறை மூலமாக தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலமாக அரை வட்ட புறவழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே திருவாரூர் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்திட அரைவட்ட புறவழிச்சாலை திட்ட பணிகளை தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விரைந்து முடிக்க வேண்டும்

இதுகுறித்து திருவாரூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் கூறுகையில்,மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வாகன எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. அதற்கு தேவையான அளவில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். குறிப்பாக சாலை வசதிகளை மேம்படுத்திட ேவண்டும். திருவாரூர் பகுதியில் அரை வட்ட புறவழிச்சாலை அமைக்க திட்டமிட்டு பல ஆண்டுகள் ஆகின்றது.

ஆனால் அதற்கான பணிகள் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது தி.மு.க. ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் புறவழிச்சாலை பணிகளை உடனடியாக தொடங்கி நிறைவேற்றினால் திருவாரூர் நகர் பகுதி போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுப்படும்.

சாலை விபத்துகள் அதிகரிப்பு

திருவாரூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் கூறுகையில், தஞ்சை-நாகை பிரதான சாலை, திருவாரூர் வழியாக தான் வானங்கள் செல்ல வேண்டும். அதுவும் நகர் பகுதி வழியாக தான் செல்கிறது. இதனால் நாள்தோறும் வேளாங்கண்ணி, நாகூர் போன்ற பகுதிக்கு செல்லும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடியில் திருவாரூர் சிக்கி தவித்து வந்தது. இதுமட்டுமின்றி காரைக்கால் துறைமுகத்தில் இருந்து இறக்குமதியாகும் நிலக்கரியை ஏற்றி கொண்டு லாரிகள் இந்த வழியாக பல்வேறு பகுதிகளுக்குசெல்கிறது. கனரக வாகன போக்குவரத்து என்பது அதிகரித்து வருகிறது. அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பிப்பதுடன், சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. எனவே திருவாரூர் அரைவட்ட புறவழிச்சாலை பணிகளை உடனடியாக தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும் என்பதே மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.


Next Story