தூத்துக்குடி, உடன்குடியில்3 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு


தூத்துக்குடி, உடன்குடியில்3 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
x
தினத்தந்தி 10 Aug 2023 6:45 PM GMT (Updated: 10 Aug 2023 6:46 PM GMT)

தூத்துக்குடி, உடன்குடியில் 3 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி, உடன்குடியில் கடைகளில் பணியாற்றிய 3 தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். அவர்களை மீண்டும் பள்ளிக்கூடத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் தலைமையில், துணை இயக்குனர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், மாவட்ட ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, சைல்டுலைன், தொழிலாளர் துறை ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மற்றும் உடன்குடி பகுதிகளில் உள்ள கடைகளில் குழந்தை மற்றும் வளர்இளம் பருவ தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்களா? என்று சோதனை செய்தனர். அப்போது தூத்துக்குடியில் 18 வயது பூர்த்தியாகாத 2 குழந்தை தொழிலாளிகளையும், உடன்குடியில் குழந்தை தொழிலாளியும் மீட்கப்பட்டனர். அவர்களை பணிக்கு அமர்த்திய நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட 3 பேரையும், அவர்கள் ஏற்கனவே இடையில் நின்ற பள்ளிக்கூடத்தில் மீண்டும் சேர்ந்து கல்வியை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தகவல் தெரிவிக்கலாம்

மேலும் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்தவிதமான பணியிலும், 18 வயதுக்கு உட்பட்ட வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களிலும் பணியமர்த்தக் கூடாது. அவ்வாறு பணியமர்த்தினால் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமோ, 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைதண்டனையோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் குழந்தை தொழிலாளர்களை யாரேனும் பணிக்கு அமர்த்தி இருந்தால், அது குறித்த விவரத்தை குழந்தை பாதுகாப்பு உதவி எண் 1098, மற்றும் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை 0461-2340443 என்ற எண்ணையோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் தெரிவித்து உள்ளார்.


Next Story