தூத்துக்குடியில்புதியதொழில் தொடங்க பயனாளிகளுக்கு ரூ.315 கோடி கடனுதவி:கனிமொழி எம்.பி வழங்கினார்


தூத்துக்குடியில்புதியதொழில் தொடங்க பயனாளிகளுக்கு ரூ.315 கோடி கடனுதவி:கனிமொழி எம்.பி வழங்கினார்
x
தினத்தந்தி 23 Aug 2023 6:45 PM GMT (Updated: 23 Aug 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில் புதியதொழில் தொடங்க பயனாளிகளுக்கு ரூ.315 கோடி கடனுதவியை கனிமொழி எம்.பி வழங்கினார்

தூத்துக்குடி

தூத்துக்குடியில் புதிய தொழில் தொடங்கு பயனாளிகளுக்கு ரூ.315 கோடி கடனுதவியை நேற்று கனிமொழி எம்.பி. வழங்கினார்.

தொழிற்கடன் முகாம்

தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தொழிற்கடன் வசதியாக்கல் முகாம் மற்றும் கடன் ஆணைகள் வழங்கும் விழா தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் சுவர்ணலதா வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ரூ.315 கோடி மதிப்பிலான கடன் உதவியை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டின் பொருளாதாரத்தில் 35 சதவீதம் தொழில்துறையை சார்ந்து உள்ளது. ஏற்றுமதியில் 45 சதவீதம் சிறு, குறு, நடுத்தர தொழில்களின் பங்கு உள்ளது. இன்று மிகப்பெரிய தொழிற்சாலைகள் எல்லாம் அதிக பேருக்கு வேலைவாய்ப்புகளை தருவது கிடையாது. ஏனென்றால் அவை தொழில்நுட்பங்கள் சார்ந்தவையாக உள்ளன. இதனால் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரக்கூடியது சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்தான். யாராக இருந்தாலும் ஒரு சிறிய தொழில் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களது மிகப்பெரிய கனவு. நாம் தற்போது புதிய தொழில் தொடங்க ரூ.315 கோடி மதிப்பில் கடனுதவியை வழங்குகிறோம். எனவே நம்முடைய அடுத்த இலக்கு ரூ.500 கோடியாக இருக்க வேண்டும். இன்னும் தொழிலை விரிவுப்படுத்த வேண்டுமென்றால் இப்போது வாங்கிய கடனை சரியாக கட்ட வேண்டும். நீங்கள் சரியாக கடனை திருப்பி செலுத்துவீர்கள் என்ற நம்பிக்கையில்தான் உங்களுக்கு கடன் வழங்கப்பட்டு உள்ளது, என்றார்.

தொழில் வளர்ச்சி

நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேசும் போது, முதல்-அமைச்சர் மாவட்ட தொழில் மையம், சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனம் மூலம் அதிக தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்று அதிக முயற்சி எடுத்து வருகிறார். நமது மாவட்டத்தில் அதிக அளவு தொழில் தொடங்க கடன் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிய கட்டிடம்

முன்னதாக மாவட்ட பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலக புதிய கட்டிடத்தை கனிமொழி எம்.பி திறந்து வைத்தார். அந்த வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டினார். நிகழ்ச்சியில் சிறப்பு தலைமை செயற்பொறியாளர் வெங்கடாசலம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story