மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12,500 கன அடியாக நீடிப்பு
அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
மேட்டூர்,
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து 4-வது நாளாக ஒகேனக்கலுக்கு விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையில் காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறைந்த போதிலும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. அதன்படி கடந்த 17-ந்தேதி மாலை 4 மணியில் இருந்து விநாடிக்கு 12,500 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. அதாவது, அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12,000 கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளன.
அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் தொடர்ந்து 39-வது நாளாக நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது. அணை முழுவதும் நிரம்பி உள்ளதால் கடல் போல் காட்சி அளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.