சக்கரம் ஏறியதில் பெண் பக்தர் படுகாயம்


சக்கரம் ஏறியதில் பெண் பக்தர் படுகாயம்
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 23 Nov 2022 6:47 PM GMT)

சக்கரம் ஏறியதில் பெண் பக்தர் படுகாயம் அடைந்தார்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பல ஆண்டுகளாக பழுதாகி கிடந்த தங்கத்தேரானது புதுப்பிக்கப்பட்டது. கடந்த 3-ந்் தேதி இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு ராமேசுவரம் கோவிலில் ஆய்வு செய்தபோது தங்கத்தேரை பார்வையிட்டு மீண்டும் தங்கத்தேரோட்டத்தை தொடங்கி வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். மேலும் தினமும் தேரை கோவில் நிர்வாகம் சார்பில் இழுத்து வரவேண்டும் என்றும் அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி தினமும் மாலை 6 மணிக்கு மேல் அம்பாள் அலங்காரம் செய்து தங்கத்தேரில் வைக்கப்பட்டு மூன்றாம் பிரகாரத்தை சுற்றி இழுத்து வரப்படுகின்றது.

இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் கோவில் பணியாளர்களால் கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் இருந்து தங்கத்தேரானது இழுக்கப்பட்டது. நடராஜர் சன்னதி எதிரே தேர் வந்தபோது பிரகாரத்தில் ஒரு பகுதியில் தடுப்பு கம்பிகள் இருந்ததை அகற்றாமல் இழுத்ததால் தேரின் சக்கரமானது தேரை இழுத்து வந்த தெலுங்கானாவை சேர்ந்த ராஜமணி (வயது 60) என்ற பக்தரின் காலில் ஏறியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அவருக்கு ராமேசுவரம் கோவில் முதலுதவி மருத்துவ மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலமாக ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தேர்களை இழுக்கும் போது கோவிலில் சாமி வாகனம் மற்றும் தேர்களை இழுக்கும் பணியில் உள்ள சீர்பாத பணியாளர்களையும் வைத்து இழுக்க வேண்டும். ஆனால் சீர்பாத பணியாளர்கள் இல்லாமல் கோவில் பணியாளர்கள் தேரை வேகமாக இழுத்து வந்ததால் பெண் பக்தரின் காலில் சக்கரம் ஏறி அவர் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story