குமாரபாளையத்தில் 80 குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது: காவிரி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு


குமாரபாளையத்தில் 80 குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்த நிலையில், காவிரி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு செய்தார்.

நாமக்கல்

குமாரபாளையம்:

குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் கனஅடிக்கு மேல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் கரையோர பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குமாரபாளையத்தில் 80 குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இங்கு குடியிருந்த மக்கள் 200 பேர் முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று இரவு 7 மணிக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் குமாரபாளையத்துக்கு வந்தார். அவர் காவிரி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதை பார்வையிட்டார். தொடர்ந்து அவர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் கலெக்டர் ஸ்ரேயாசிங் குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

குளிக்க தடை

கர்நாடக மாநிலத்தில் இருந்து மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் அப்படியே திறந்து விடப்படும். இதனால் பொதுமக்கள், இளைஞர்கள் காவிரி ஆற்றின் கரையோரம் நின்று செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். நீச்சல் அடிக்க கூடாது. ஆற்றில் குளிக்க அனுமதி இல்லை.

கடந்த முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, 7 முகாம்கள் அமைத்து இருந்தோம். சுமார் 698 குடும்பங்கள் பாதுகாக்கப்பட்டன. தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அதிகமான மக்கள் வந்தாலும் அவர்களுக்கும் தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு பவானி, பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் 9 இடங்களில் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சிலைகள் கரைக்க ஏற்பாடு

தற்போது வரும் நீரின் அளவை விட, அதிகமாக வந்தால் சிலைகளை சம்பந்தப்பட்ட நபர்கள் கரைக்க தடை விதிக்கப்படும். பாதுகாப்பு குழு மூலம் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ராஜேந்திரன், தாசில்தார் தமிழரசி மற்றும் பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளர், வருவாய் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story