தபால் அலுவலகத்தில் ரூ.10 லட்சத்துக்கான விபத்து காப்பீடு பெறும் வசதி அறிமுகம்


தபால் அலுவலகத்தில் ரூ.10 லட்சத்துக்கான விபத்து காப்பீடு பெறும் வசதி அறிமுகம்
x

தூத்துக்குடி தபால் அலுவலகத்தில் ஆண்டுக்கு ரூ.399 செலுத்தி ரூ.10 லட்சத்துக்கான விபத்து காப்பீடு பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது என்று தூத்துக்குடி கோட்ட தபால் கண்காணிப்பாளர் பொன்னையா தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தபால் அலுவலகத்தில் ஆண்டுக்கு ரூ.399 செலுத்தி ரூ.10 லட்சத்துக்கான விபத்து காப்பீடு பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது என்று தூத்துக்குடி கோட்ட தபால் கண்காணிப்பாளர் பொன்னையா தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

காப்பீடு திட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் 18 வயது முதல் 65 வயது வரை உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுக்கு ரூ.399 செலுத்தி ரூ.10 லட்சத்துக்கான விபத்து காப்பீடு பெறும் வசதியை தபால்துறை அறிமுகம் செய்து உள்ளது.

அனைத்து தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் உள்பட அனைத்து வகையான பணி செய்பவர்களும் இந்த விபத்து காப்பீடு பெற்று பயனடையலாம். தொழில் நிறுவனங்கள் மற்றும் அனைத்து வகையான தொழிற்சாலைகள், தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மொத்தமாகவும், இந்த காப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம். பணிபுரியும் அலுவலகங்களிலேயே சிறப்பு முகாம் நடத்தி பணியாளர்களுக்கு விபத்து காப்பீடு வசதி ஏற்படுத்தி தரப்படும். விண்ணப்ப படிவம், அடையாள, முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்தவிதமான காகித பயன்பாடும் இன்றி தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன், விரல் ரேகை பதிவு எந்திரம் மூலம் 5 நிமிடத்தில் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படும்.

பயன்கள்

இந்த திட்டத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு, விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள் (உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரை, புறநோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.30 ஆயிரம் வரை), விபத்தில் மரணம், ஊனம், பக்கவாதம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கு ரூ.1 லட்சம் வரையும், விபத்தில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு தினப்படி தொகை ஒரு நாளுக்கு ரூ.1000 வீதம் 10 நாட்களுக்கும், விபத்தில் பாதிக்கப்பட்டவரை பார்க்க பயணிக்கும் குடும்பத்தினரின் பயண செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் வரையும், விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் ஈமக்கிரியைகள் செய்ய ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படும்.

எனவே பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள தபால் நிலையங்கள், தபால்காரர்கள் மூலம் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story