மீஞ்சூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் மீது இரும்பு கம்பியால் தாக்குதல்; சென்னையை சேர்ந்த 5 பேர் கைது


மீஞ்சூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் மீது இரும்பு கம்பியால் தாக்குதல்; சென்னையை சேர்ந்த 5 பேர் கைது
x

மீஞ்சூர் அருகே கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவரை இரும்பு கம்பியால் தாக்கியதாக சென்னையை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருவள்ளூர்

ஊராட்சி மன்ற தலைவர்

மீஞ்சூர் அருகே உள்ள கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவராக மனோகரன் (வயது 38) என்பவர் இருந்து வந்தார். இவர் கடந்த ஆண்டு மே மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து ஊராட்சி மன்ற துணை தலைவராக இருந்து வந்த கவுண்டர்பாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த அரிகிருஷ்ணன் (33) என்பவர் ஊராட்சி மன்ற பொறுப்பு தலைவராக வார்டு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு கவுண்டர்பாளையம் தனியார் நிலத்தில் நிலக்கரி கழிவு சாம்பலை கொட்டி சமன்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். பின்னர், வேலை முடிந்து பணி நடக்கும் பகுதியில் உள்ள அறை ஒன்றில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

7 பேர் கைது

அப்போது நேற்று அதிகாலை 5 மணியளவில் 7 பேர் கொண்ட கும்பல் கதவை தட்டினர். எழுந்து வந்த அரிகிருஷ்ணனிடம் திடீர் தகராறில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் அரிகிருஷ்ணனை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடினர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் அரிகிருஷ்ணனுக்கு கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர், மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியதாக அப்பகுதியில் பதுங்கியிருந்த திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (42), தணிகாசலம் (33), தண்டையார்பேட்டையைச் சேர்ந்த துரை (52), மூர்த்தி (41), செங்குன்றம் அடுத்த எடப்பாளையம் பகுதியை சேர்ந்த சங்கர் (46), ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிறையில் அடைப்பு

மீஞ்சூர் போலீசார் ரமேஷ், தணிகாசலம், துரை, மூர்த்தி, சங்கர் ஆகிய 5 பேரை பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக மேலும் 2 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் கொண்டகரை ஊராட்சி பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story