எய்ம்ஸ் ஆஸ்பத்திரி காலதாமதத்துக்கு தமிழ்நாடு அரசு காரணமா? நிர்மலா சீதாராமனுக்கு, அமைச்சர் கண்டனம்
‘மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி காலதாமதத்துக்கு தமிழ்நாடு அரசு காரணம் என்பதா?' என்றும், ‘பழிபோட்டு தப்பிக்க வேண்டாம்' என்றும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை அரும்பாக்கத்தில் மாடுகள் முட்டி காயம் அடைந்த மாணவி ஆயிஷா (வயது 9), அமைந்தகரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாணவியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம், ''மாணவி நலமுடன் இருக்கிறார், அனைவரிடமும் நன்றாக பேசிக்கொண்டிருக்கிறார். சரியான நேரத்தில் அந்த குழந்தையை ஆஸ்பத்திரியில் அனுமதித்து காப்பாற்றி இருக்கிறார்கள்'', என்று கூறினார்.
நில ஆர்ஜிதம் செய்யவில்லையா?
அதனைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேலும் கூறியதாவது:-
மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி இன்றைக்கு காலதாமதம் ஆவதற்கு காரணம், மாநில அரசு இடத்தை கையகப்படுத்தி தராததால்தான். மேலும் ரூ.1,200 கோடியில் திட்டமிடப்பட்டது ரூ.1,900 கோடியாக உயர்ந்து இருக்கிறது. இதற்கெல்லாம் தமிழ்நாடு அரசு காலதாமதம் செய்ததுதான் காரணம் என்று, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தவறான கருத்தை நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார்.
2015-ம் ஆண்டு மத்திய அரசின் சார்பில் 7 இடங்களில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி வரும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் ஒன்றாக, மதுரை தோப்பூரில் 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் தற்போது எந்தவிதமான கட்டுமானப் பணிகளும் நடைபெறாமல் உள்ளது.
ஆனால், தமிழ்நாடு அரசு நில ஆர்ஜிதம் செய்து தரப்படாததால் மருத்துவமனை கட்டுவதில் காலதாமதம் ஏற்படுகிறது என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சொல்லியிருக்கிறார்.
கடன் வாங்க அறிவுறுத்தல்
எங்கள் கேள்வி என்னவென்றால், 4 ஆண்டுகளுக்கு முன்பு நில ஆர்ஜிதம் செய்யப்படாத ஒரு இடத்தில் பிரதமர் எப்படி வந்து அடிக்கல் நாட்ட முடியும்? ஏனெனில் இந்த இடம் 222.47 ஏக்கர் அரசாங்கத்திற்கு சொந்தமான இடம், இது ஆர்ஜிதம் செய்யப்படவேண்டிய அவசியம் இல்லை.
இந்த இடத்தை நிலமாற்றம் செய்து தரப்பட வேண்டும். மத்திய அரசுக்கு இதனை மாற்றம் செய்து தரவேண்டும். முழுமையாக இதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அ.தி.மு.க. அரசு, இந்த இடத்தை நிலமாற்றம் செய்து மத்திய அரசுக்கு தந்திருக்கிறார்கள், பின்னர்தான் அங்கு பிரதமர் அடிக்கல் நாட்டியுள்ளார்.
மற்ற மாநிலங்களில் 100 சதவீத எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் அனைத்தும் மத்திய அரசின் நிதி ஆதாரத்தில் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் மாநில அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்த பின்னரும், மத்திய அரசு நிதி ஆதாரத்தை தராமல் 'ஜிகா' அமைப்பிடம் கடன் வாங்க அறிவுறுத்துகிறது.
பழிபோட்டு தப்பிக்க வேண்டாம்
நாங்கள் ஜப்பானில் உள்ள 'ஜிகா' அமைப்பிடம் இதுகுறித்து கேட்டபோது, 2024-ம் ஆண்டு இறுதியில்தான், கட்டிடத்தின் வடிவம் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்த புள்ளி கோரப்படும். 2028-ம் ஆண்டு தான் இந்த கட்டிடங்கள் முழுமையாக கட்டப்படும் என்று கூறியுள்ளது. எனவே மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம், மற்ற மாநிலங்களுக்கு காட்டும் அக்கறையை தமிழ்நாட்டின் மீதும் காட்டி, மற்றவர்கள் மீது பழிபோட்டு தப்பிக்க பார்க்காமல், மத்திய அரசே முழு நிதியையும் தந்து, இந்த மருத்துவமனையை கட்ட தொடங்கினால் 2 ஆண்டிற்குள் கட்டி முடிக்கலாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.