முக்காணி அருகே தாமிரபரணியில் கட்டப்படும்தடுப்பணையில் 138 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமிக்கப்படும்
முக்காணி அருகே தாமிரபரணியில் கட்டப்படும் தடுப்பணையில் 138 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமிக்கப்படும் என்று நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் கண்ணன் தெரிவித்தார்.
முக்காணி அருகே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு வரும் தடுப்பணையில் 138 மில்லின் கனஅடி தண்ணீர் சேமிக்கப்படும் என்று நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் ஆர்.கண்ணன் தெரிவித்தார்.
ஆய்வு
தமிழக நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் கண்ணன் நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். அவர் தூத்துக்குடி மாவட்டம் முக்காணி அருகே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ரூ.46 கோடியே 14 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
138 மில்லியன்
பின்னர் அவர் கூறும் போது, புதிதாக கட்டப்பட்டுவரும் தடுப்பணையால் அருகில் உள்ள சேர்ந்தமங்கலம், கைலாசபுரம், ஆத்தூர், புன்னக்காயல், ராமசந்திரபுரம் மற்றும் முக்காணி ஆகிய கிராமங்களை சுற்றியுள்ள 1205 எக்டேர் ஆயக்கட்டு பாசனபரப்பு பயன்பெறுகிறது. மேலும், தடுப்பணையில் 138 மில்லியன் கன அடி நீர் சேமிக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். கடல் நீர் உட்புகுதல் தடுக்கப்படுவதால் நிலத்தடி நீரின் தன்மை பாதுகாக்கப்படுகிறது என்று கூறினார்.
ஆய்வின் போது, தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் எஸ்.மாரியப்பன்,
உதவி செயற்பொறியாளர் எஸ்.பேச்சிமுத்து, உதவிபொறியாளர் வி.பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.