மல்லிகை கிலோ ரூ.720-க்கு விற்பனை


மல்லிகை கிலோ ரூ.720-க்கு விற்பனை
x
திருப்பூர்


சுபமுகூர்த்த தினங்களையொட்டி திருப்பூர் பூ மார்க்கெட்டில் நேற்று மல்லிகைப்பூ ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.320 உயா்ந்து கிலோ ரூ.720-க்கு விற்கப்பட்டது. அதுபோல் இதர பூக்களின் விலையும் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

ஆவணி மாதம்

ஆவணி மாதம் என்றாலே சுபநிகழ்ச்சிகள் அதிகமாக இருக்கும். அந்த நேரங்களில் பூக்களின் தேவை அதிகமாக இருப்பதால் பூக்களின் விலை அதிகரிக்கும். இன்று ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்தம் என்பதால் திருப்பூர் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.

நேற்று முன்தினம் கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.720-க்கு விற்பனை செய்யப்பட்டது. மார்க்கெட்டில் பூக்களின் வரத்து வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. சத்தியமங்கலம், சேலம், நிலக்கோட்டை, திண்டுக்கல், பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

விலை நிலவரம்

திருப்பூர் பூ மார்க்கெட்டில் நேற்று விற்கப்பட்ட பூக்களின் விலை விவரம் வருமாறு:-

மல்லிகை ரூ.720, கனகாம்பரம் ரூ.1000, ஜாதிமல்லி ரூ.600, முல்லை ரூ.320, அரளி ரூ.170, செவந்தி ரூ.320, சம்பங்கி ரூ.500, செண்டுமல்லி ரூ.120, ரோஜா ரூ.320, கோழிக்கொண்டை ரூ.120, தாமரை ஒரு பூ ரூ.20 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. நாளையும் முகூர்த்த தினம் என்பதால் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்று பூ மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story