செம்பட்டி அருகே குடகனாற்றில் கிடந்த கருப்புசாமி சிலை


செம்பட்டி அருகே குடகனாற்றில் கிடந்த கருப்புசாமி சிலை
x
தினத்தந்தி 20 Jun 2023 9:00 PM GMT (Updated: 20 Jun 2023 9:00 PM GMT)

செம்பட்டி அருகே குடகனாற்றில் கருப்புசாமி சிலை கிடந்தது.

திண்டுக்கல்

செம்பட்டி அருகே கும்மம்பட்டி செல்லும் சாலையின் குறுக்கே குடகனாறு செல்கிறது. நேற்று இந்த ஆறு வழியாக பொதுமக்கள் சிலர் நடந்து சென்றனர். அப்போது குடகனாற்று கரையில், புதிதாக கல்லால் செதுக்கப்பட்ட சாமி சிலை ஒன்று கிடந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் வக்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தார். அப்போது குடகனாற்று கரையில் சுமார் 5 அடி உயரம் உள்ள கருப்புசாமி சிலை, அதன் கண்கள் பகுதியில் துணியால் கட்டப்பட்ட நிலையில் இருந்தது.

பின்னர் அவர் அந்த சிலையை பொதுமக்கள் உதவியுடன் கிராம நிர்வாக அலுவலர் கைப்பற்றி ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தார். இந்த சிலை திடீரென அந்த பகுதியில் வைக்கப்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. மேலும் கருப்புசாமி சிலையில் கண்கள் கட்டி வைக்கப்பட்டு, அந்த இடத்தில் மண்சட்டி உடைக்கப்பட்டு இருந்ததால், பில்லி சூனியம், செய்வினை செய்வதற்காக சிலை வைக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குடகனாற்று கரையில் திடீரென வைக்கப்பட்ட சிலையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story