கொரோனா போய்விட்டதா? இனி பயம் இல்லையா?- மருத்துவர்கள், பொதுமக்கள் கருத்து


கொரோனா போய்விட்டதா? இனி பயம் இல்லையா?- மருத்துவர்கள், பொதுமக்கள் கருத்து

ஈரோடு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2019-ம் ஆண்டு பரவத் தொடங்கியது. இது ஒரு வகையான சுவாசம் சம்பந்தப்பட்ட நோய் என்பதால் தும்மும் போதும், இருமும் போதும் வெளியேற்றப்படும் சிறிய நீர்த்துளிகள் வழியாக அடுத்தவர்களுக்கு எளிதாக பரவி லட்சக்கணக்கான உயிர்களைப் பறித்தது.

பொதுமக்கள் அச்சம்

இந்தத் தொற்றால் இறந்தவர்களின் உடலை குடும்பத்தினர்கூட அருகில் சென்று பார்க்க முடியாத அளவுக்கு பரிதாபநிலை ஏற்பட்டது. உலகில் உயிர்களை பறித்ததுடன், மனிதர்களை மட்டும் அல்லாது அரசாங்கங்களையும் கடந்த சில ஆண்டுகளில் தலைகீழாகப் புரட்டி போட்டது கொரோனா.

தடுப்பூசிகள் மூலம் அதன் பரவலை தடுத்துவிட்டாலும் தற்போது 4-வது அலை, 5-வது அலை வரப்போகிறது என்றெல்லாம் ஆங்காங்கே புரளிகள் புரண்டு வருவதால், பொதுமக்கள் கொஞ்சம் அச்சப்படத்தான் செய்கின்றனர்.

பயணங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்லும் போதுகூட கண்டிப்பு இல்லாவிட்டாலும் தற்காப்புக்காக ஒரு சிலர் முக கவசங்கள் அணிந்து செல்வதையும் காணமுடிகிறது. உண்மையில் கொரோனா ஒழிந்து விட்டதா? தைரியமாக நடமாடலாமா? பொது இடங்களில் முக கவசம் அணியாமல் செல்லலாமா? என்று பலதரப்பட்ட கேள்விகளை பொதுமக்கள் கேட்கின்றனர். அதற்கு மருத்துவர்களும் மற்றவர்களும் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

டாக்டர் கே.எம்.அபுல்ஹசன்

இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளை தலைவர் டாக்டர் கே.எம்.அபுல்ஹசன் கூறியதாவது:-

கொரோனா பரவல் மற்றும் பாதிப்பு வெகுவாக குறைந்து உள்ளது. பெரும்பாலான நாடுகளில் கொரோனா அறிகுறி 10 சதவீதத்துக்கும் கீழே குறைந்து விட்டது. பல நாடுகளிலும் கொரோனா அறிகுறி இல்லாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உலக நாடுகளில் கொரோனா பாதிப்பால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்ப்பது, கொரோனா மரணம் இல்லை என்ற பதிவு வந்து இருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவும் வேகமும், அதன் வீரியமும் முன்பை விட நன்கு குறைந்து விட்டது. இதற்கு தடுப்பு நடவடிக்கை, குறிப்பாக தனிநபர் தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தப்படுத்துதல் ஆகியவை பரவல் சங்கிலியை உடைத்து எறிந்தன என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதுமட்டுமின்றி, தடுப்பூசிகள் மிகப்பெரிய தடுப்பு பணியை செய்தன.

பூஸ்டர் தடுப்பூசிகளை ஆண்டுக்கு ஒரு முறை செலுத்தினால் இனிமேல் கொரோனா வந்தாலும் அது பாதிக்காத வகையில் செய்து விடலாம் என்று அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அதுகுறித்து அரசுகள் முடிவு செய்யும். ஆனால், கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிவது, வெளியிடங்களுக்கு சென்று வந்தால் கைகளை சுத்தம் செய்வது ஆகியவற்றை வழக்கமாக வைத்துக்கொள்வது நல்லது.

மேலும், பொது இடங்களில் இருமும் போது கைக்குட்டை வைத்துக்கொள்வது, கைகளால் மறைத்துக்கொள்வது அவசியம். யாராவது அப்படி திறந்தவெளியில் இருமினால் கைக்குட்டை வைத்துக்கொள்ளும்படி மற்றவர்கள் அறிவுறுத்த வேண்டும். இது தொற்று நோய்கள் பரவுவதை தடுக்கும்.

இவ்வாறு டாக்டர் கே.எம்.அபுல்ஹசன் கூறினார்.

செவிலியர் ஷகிலா

அரசு ஆஸ்பத்திரி மூத்த செவிலியர் ஷகிலா கூறியதாவது:-

கொரோனாவின் தாக்கம் கடுமையாக இல்லாமல் தற்போது மிகவும் குறைந்து இருக்கிறது. அதற்காக மீண்டும் வரும் வாய்ப்பு இல்லை என்று கூற முடியாது. எங்கேனும் பரவல் தொடங்கினால் அது அனைவரையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. நாம் தடுப்பூசி போட்டு இருப்பதால் பரவல்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதுமட்டுமின்றி கொரோனா குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இப்போது அதிகமாக உள்ளது. எனவே லேசான அறிகுறி இருந்தால் கூட, மக்கள் தடுப்பு நடவடிக்கைளில் ஈடுபடுகிறார்கள். எனவே இனிமேல் கொரோனா வந்தாலும் அதில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும். தடுப்பூசியும் பாதுகாப்பு தருகிறது. எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அதுமட்டுமின்றி, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து, அடிப்படை பிரச்சினைகளை சரி செய்து கொள்ள வேண்டும். உணவு வழக்க மாற்றம், உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றின் மூலம் எந்த வகையான தொற்றில் இருந்தும் பாதுகாக்க உடல் தயாராக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமூக ஆர்வலர் ஜெ.ஜெ.பாரதி

சமூக ஆர்வலர் ஜெ.ஜெ.பாரதி கூறியதாவது:-

கொரோனா பரவல் இந்த மனித சமுதாயத்தை ஆட்டிப்படைந்த பேரழிவாக இருந்தது. ஆனால், அறிவியல் துணை கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியால் துரத்தி இருக்கிறோம் என்பதே உண்மை. தற்போதைய நிலைய பார்த்தால் கொரோனா இல்லை என்றே கூறலாம். அதுவும் இந்தியாவில் வாழும் மக்களாகிய நாம் முழுமையாக தடுப்பூசி செலுத்தி இருக்கிறோம். 2 தடுப்பூசிகளுடன், பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டவர்கள் அதிகம் உள்ளனர். எனவே தடுப்பூசியின் பாதுகாப்பில் கொரோனாவை வென்று விட்டோம் என்றே கூறலாம்.

ஆனால், சீனாவில் சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் கொரோனா பரவல் என்ற தகவல் வந்தபோது மிகுந்த அச்சம் இருந்தது. மீண்டும் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிய அரசே எச்சரிக்கை செய்தது. சீனாவில் இருந்து வந்த பயணிகள் சிலருக்கு கொரோனா கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால், அது இங்கு பரவலை ஏற்படுத்தவில்லை. எனவே இனிமேல் கொரோனா பேரழிவு இருக்க வாய்ப்பு இல்லை என்றேகூறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைமை ஆசிரியை கே.சுமதி

ஈரோடு மாநகராட்சி எஸ்.கே.சி. ரோடு நடுநிலைப்பள்ளிக்கூட தலைமை ஆசிரியை கே.சுமதி கூறியதாவது:-

கொரோனா கால கட்டத்தில் இருந்த அச்சம் இப்போது இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை முகக்கவசம் அணிவதில் இருந்து விலக்கு பெற்று விட்டார்கள். எங்குமே கொரோனா பாதிப்பு, கொரோனா மரணம் உள்ளிட்ட தகவல்கள் இல்லை. இது நிம்மதியான செய்திதான். அதே நேரம் சமீப காலமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு வகை சளி-காய்ச்சல் வருகிறது. பள்ளிக்கூடங்களில் படிக்கும் 100 குழந்தைகளில் குறைந்த பட்சம் 4 பேர் தினசரி காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்கள் 3 அல்லது 4 நாட்கள் ஓய்வு எடுத்தால் சரியாக போகிறது.

இதற்கு காய்ச்சல் மாத்திரை கொடுத்தால் போதும் என்று சுகாதாரத்துறை பணியாளர்கள் பள்ளிக்கூடங்களிலும் மாத்திரைகள் வழங்கி உள்ளனர். இது உடலளவில் பெரிய பாதிப்பு ஏற்படுத்தவில்லை. எனினும் இந்த காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story