ஒருமாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கொப்பரை கொள்முதல் தொடங்கியது


ஒருமாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கொப்பரை கொள்முதல் தொடங்கியது
x
திருப்பூர்

போடிப்பட்டி, ஆக.31-

சுமார் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு அரசு கொள்முதல் மையங்கள் மூலம் மீண்டும் கொப்பரை கொள்முதல் தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆதார விலை

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் உள்ளது. இங்குள்ள விவசாயிகள் தேங்காய், இளநீர் மட்டுமல்லாமல் கொப்பரை உற்பத்தியின் மூலமும் வருவாய் ஈட்டி வருகின்றனர். சமீபகாலங்களாக தேங்காய் மற்றும் கொப்பரைக்கு போதிய விலை கிடைக்காத நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிப்படைவதைத் தவிர்க்க மத்திய அரசின் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு (நேபெட்) மூலம் கொப்பரைக்கு ஆதார விலை நிர்ணயம் செய்து அரசு கொள்முதல் மையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது. அந்தவகையில் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, காங்கேயம், பெதப்பம்பட்டி, பொங்கலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் அரசு கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டு ஒரு கிலோ அரவை கொப்பரை ரூ.105.90 -க்கும், பந்து கொப்பரை ஒரு கிலோ ரூ.110-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய கொப்பரை கொள்முதல் கடந்த மாத இறுதி வரை நடைபெற்றது.

முன்பதிவு

வெளிச்சந்தையில் கொப்பரை விலை கிலோவுக்கு ரூ.80 என்ற அளவில் குறைந்த நிலையில் கொள்முதல் மையங்கள் விவசாயிகளுக்கு பெருமளவு கைகொடுத்தது. எனவே நிறுத்தப்பட்ட கொப்பரை கொள்முதலை மீண்டும் தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து சுமார் ஒரு மாதமாக நிறுத்தப்பட்ட கொப்பரை கொள்முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

விலை ஆதாரத்திட்டம் மூலம் கொப்பரை கொள்முதல் செப்டம்பர் 30 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.கொப்பரை கொள்முதலில் பழைய நடைமுறையே தொடரும். எனவே தகுதி உடைய விவசாயிகள் போட்டோ, ஆதார் நகல், வங்கி கணக்குப்புத்தக நகல், உரிமை சான்று, அடங்கல், சிட்டா உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து, விற்பனைக்கூட கண்காணிப்பாளரை அனுகி முன் பதிவு செய்து கொள்ளலாம் இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- வெளிச் சந்தையில் தேங்காய், கொப்பரை விலை கடுமையாக சரிந்துள்ள நிலையில் அரசு கொள்முதலை நீடித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில் கொப்பரைக்கு கிலோவுக்கு ரூ.150 தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்தல், ஒரு ஏக்கருக்கான கொப்பரை கொள்முதல் அளவை அதிகரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


Next Story