ஈரோட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்


ஈரோட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஈரோடு


ஈரோட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அனுமன் ஜெயந்தி

ஈரோட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள பிரசித்தி பெற்ற மகாவீர ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று அதிகாலை 3 மணிக்கு கணபதி அபிஷேகமும், 4 மணிக்கு மூலவருக்கு மகா திருமஞ்சனமும் நடந்தது. அதைத்தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விசேஷ செந்தூர அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மதியம் 1.30 மணிக்கு ஒரு லட்சத்து 8 வடைகளை நூலில் கோர்த்து மூலவருக்கு மாலையாக அணிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் மாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டது. இதில் வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி உள்பட ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். கோவிலில் வார வழிபாட்டு குழு சார்பில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு மற்றும் கையில் கட்டிக்கொள்ளும் ஆரஞ்சு நிற கயிறு வழங்கப்பட்டது. மேலும் அன்னதானமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

வெண்ணெய் காப்பு அலங்காரம்

இதேபோல் ஈரோடு மாணிக்கம்பாளையம் ரோடு பெரியவலசு ராஜகணபதி கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதியில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக காலை 6 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் ஆஞ்சநேயருக்கு பால், தயிர், சந்தனம், பழவகைகள், மஞ்சள், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

ஈரோடு கள்ளுக்கடைமேடு ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆஞ்சநேயர் விசேஷ செந்தூர அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பக்த ஆஞ்சநேயர்

ஈரோடு கைக்காட்டிவலசு திருவள்ளுவர் நகர் கணபதி கோவிலில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் சன்னதியில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக காலை 6 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் நடந்தது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் ஈரோடு கோட்டை பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதியிலும், சூரம்பட்டியில் உள்ள மகாவீர ஆஞ்சநேயர் கோவில், சோளக்கவுண்டன்பாளையம் சித்தி விநாயகர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதி, காரைவாய்க்கால் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் நேற்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.


Next Story