குலசேகரன்கோட்டையில் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
குலசேகரன்கோட்டையில் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டையில் சிறுமலையடிவாரத்தில் குலசேகரபாண்டியமன்னரால் கட்டப்பட்ட 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சிசுந்தரேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. முதல்நாள் விக்னேஸ்வர பூஜையுடன் கணபதிஹோமம், பூர்ணாகுதியும், கிராமசாந்தியும், 2-ம் நாள் மகாலட்சுமி ஹோமம், சுதர்சன, சாந்தி, மூர்த்தி ஹோமங்கள், வாஸ்துசாந்தியும் நடந்தது. 3-ம் நாள் யாகசாலை நிர்மானம், தீபாராதனை, முதற்கால யாக பூஜைகள், பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 4-ம் நாள் 2-ம் காலயாக பூஜைகள், பக்தி பாடல் இசை நிகழ்ச்சி, பரதநாட்டியம், 3-ம் காலயாகபூஜைகள் நடைபெற்றது. 5-ம் நாள் 4-ம் காலயாக பூஜைகள் நடந்தது. பின்னர் ராமேசுவரம், அழகர்கோவில், பாபநாசம், காசி, கோதாவரி, கங்கை, காவேரி திருவேணி சங்கமம், உள்ளிட்ட பல்வேறு புனித தலங்களிலிருந்து புனிதநீர் எடுத்துவரப்பட்டு குடங்களில் புறப்பாடாகி 72 அடி உயர ராஜகோபுர கலசங்களிலும், மூலவர், பரிவாரமூர்த்திகளுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின் மீனாட்சி சுந்தரேசுவரருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், ஆராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் ஏடுராதாகிருஷ்ணன் தலைமையில் கோவில் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.