தேனி, பெரியகுளத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


தேனி, பெரியகுளத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 March 2023 8:45 PM GMT (Updated: 29 March 2023 8:45 PM GMT)

தேனி, பெரியகுளத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றிவந்த ஜெய்கணேஷ், ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது. சென்னை துரைப்பாக்கம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

கோர்ட்டு புறக்கணிப்பை தொடர்ந்து கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் கூட்டமைப்பு தென்மண்டல செயலாளர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். தேனி வக்கீல் சங்க தலைவர் செல்வன் மற்றும் வக்கீல்கள் பலர் கலந்துகொண்டனர். மறியல் செய்தவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர்.

இதேபோல் பெரியகுளம் வக்கீல்கள் சங்கம் சார்பில் பெரியகுளம் கோர்ட்டு முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் அம்பாசங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் ராமசுப்பிரமணி முன்னிலை வகித்தார். இதில், துணைச்செயலாளர் முத்தமிழரசன், பொருளாளர் மகாராசன், மூத்த வக்கீல்கள் தாமரைச்செல்வன், சிவசுப்பிரமணியன், நாராயணசாமி உள்பட 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் ஒருநாள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்திலும் வக்கீல்கள் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story