போதை பொருட்கள் விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை-கலெக்டர் விஷ்ணு எச்சரிக்கை


போதை பொருட்கள் விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை-கலெக்டர் விஷ்ணு எச்சரிக்கை
x

நெல்லை மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் விஷ்ணு எச்சரித்துள்ளார்

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் விஷ்ணு எச்சரித்துள்ளார்.

கலந்துரையாடல்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், குழந்தை பாதுகாப்பு அலகு சார்பில் போதை பொருட்கள் பயன்பாட்டினை தடுத்தல் தொடர்பான ஒருங்கிணைந்த செயல்திட்டத்தினை வகுக்கும் விதமாக அரசு அலுவலர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

போதைபொருள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக முதல்-அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் இந்த கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது.

வழிமுறைகள்

போதை பொருளின் வகைகள் குறித்தும், அதன் பயன்பாட்டினை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் அரசு அலுவலர்களுடன் விவாதம் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் சூழ்நிலை பகுப்பாய்வு மேற்கொண்டு போதை பொருட்கள் பயன்படுத்தலுக்கான காரணங்களை அறிந்து போதை பொருட்கள் பயன்பாட்டினை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

எதிர்பாராதவிதமாக போதை பழக்கத்திற்கு உள்ளாகக்கூடிய குழந்தைகளை போதை பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க வேண்டுமென்ற நோக்கத்தில் அவர்களை விளையாட்டு, கலை உள்ளிட்ட தனித்திறன் மேம்பாட்டில் ஈடுபடுத்துபவரை பெற்றோர்கள், ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

சட்ட நடவடிக்கை

போதை பழக்கத்திற்கு ஆளாகியவர்களை கண்டறிந்து அவர்களை அதிலிருந்து மீட்டெடுத்தல், ஆற்றுப்படுத்துதல், சிகிச்சைக்கு பரிந்துரைத்தல், தொடர் கண்காணித்தல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த செயல்திட்டத்தினை செயலாக்கும் விதமாக சூழ்நிலை பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே போதை பொருட்கள் விற்பனை செய்தாலோ அல்லது போதை பொருள் பயன்படுத்த ஊக்குவித்தாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரவிசந்திரன், போதையில்லா இந்தியா திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் தெரஸ்சஜீவ், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story