கிராவல் மண் ஏற்றிச்செல்லும் லாரிகளால் சாலைகளில் மண்


கிராவல் மண் ஏற்றிச்செல்லும் லாரிகளால் சாலைகளில் மண்
x
திருப்பூர்


உடுமலைப்பகுதியில் கிராவல் மண் அள்ளிச்செல்லும் லாரிகளால் சாலைகளில் மண்குவியல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

கனிம வளங்கள்

இயற்கை வளங்கள் மிகுந்து காணப்படும் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியவாறு அமைந்துள்ளது தளி அமராவதி பகுதிகள், பசுமை தாங்கிய மரங்கள், ஆறுகள், ஓடைகள் என கனிம வளங்களை தன்னகத்தே கொண்ட இந்த பகுதி காலங்காலமாக இயற்கையை பேணிக்காத்தும், உயிர்ப்பித்தும் வருகிறது.

இந்த சூழலில் கடந்த சில நாட்களாக கனிம வளங்கள் நிறைந்த இந்த பகுதியை குறி வைத்து மாபெரும் சட்டவிரோத கடத்தல் சம்பவம் நடைபெற்று வருகிறது. இதனால் தட்பவெப்ப நிலை மாற்றமும் இயற்கையைசார்ந்து வசித்து வருகின்ற உயிரினங்களுக்கும் பேராபத்து ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் கூறியதாவது:-

இரவு பகலாக கடத்தல்

தளி, அமராவதி பகுதியை மையமாகக்கொண்டு கடந்த சில நாட்களாக கனிம வளங்கள் கொள்ளை மும்முரமாக நடைபெற்று வருகிறது. முறையாக அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக லாரி லாரியாக கனிம வளங்களை அள்ளிச்சென்ற வண்ணம் உள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வருவாய்த்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

இதுவே ஏழை-எளிய மக்கள் அத்தியாவசிய தேவைக்கும் விவசாயிகள் மாட்டு கொட்டகைக்கும் டிராக்டர், மாட்டுவண்டி போன்றவற்றில் ஒரு லோடு ஏற்றிச்சென்றால் கூட தயவு தாட்சண்யம் இல்லாமல் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதிப்பது என நடவடிக்கைகள் பாய்ந்து விடும். ஆனால் வசதி, அதிகாரம் படைத்த இந்த கும்பல் உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகம் தாசில்தார் அலுவலகத்தை கடந்து தைரியமாக அனுமதி பெறாமல் இரவு பகலாக கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

சட்டமும்,அதிகாரமும் ஏழை, எளிய மக்களுக்கு எதிராக பாயும் வசதி படைத்தவர்களுக்கு எதிராக மண்டியிட்டுக் கொள்ளும் என்பதற்கு இந்த சம்பவமே சான்றாகும்.கிராவல் மண் லாரிகளால் உடுமலை பகுதி சாலைகளும் படிப்படியாக சேதம் அடைந்து வருகிறது.

இதனால் பொதுமக்களின் சாலை பயன்பாடும் போக்குவரத்தும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு பெரும்செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலமும் ஆட்டம் காண தொடங்கி உள்ளது.

மேலும் சாலைகளில் சிதறி வருகின்ற மண் குவியலால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அசுர வேகத்தில் அணிவகுத்துச் செல்லும் கடத்தல் லாரிகளால் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

அத்துடன் மண்ணில் இருந்து கிளம்பும் புகை சாலை முழுவதும் ஆக்கிரமித்துக்கொள்கிறது. கனிம வளங்கள் கொள்ளை போவதை தடுக்காதது அதிகாரிகளின் செயல் திறனற்ற தன்மையை தெளிவாக உணர்த்துகிறது. இதனால் சீரோடும் சிறப்போடும் செயல்பட்டு வருகின்ற அரசு மீது உடுமலை பகுதியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தளி அமராவதி பகுதியில் ஆய்வு செய்து கடத்தலை தடுத்து நிறுத்தி இயற்கை மற்றும் கனிம வளங்களை காப்பாற்றுவதுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் கடத்தலுக்கு உறுதுணையாக செயல்பட்டு வருகின்ற அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தனர்.


Next Story