அம்மாபேட்டை பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து மேயர் ராமச்சந்திரன் ஆய்வு
அம்மாபேட்டை பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து மேயர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
சேலம்,
சேலம் அம்மாபேட்டை மண்டலத்துக்குட்பட்ட 35-வது எல்லப்பன் தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று மேயர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் மழை பெய்தால் பள்ளி மைதானத்தில் மழைநீர் தேங்குவதாகவும், அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அங்குள்ள சுகாதார வளாகங்கள் பராமரிப்பு செய்ய வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு அவர்களிடம் பள்ளி மைதானத்தில் மழைநீர் தேங்காத அளவிற்கு 2 அடி உயரம் உயர்த்தப்படும் எனவும், பள்ளியில் உள்ள சுகாதார வளாகங்கள் பராமரிப்பு செய்து தரப்படும் என்று மேயர் உறுதியளித்தார். தொடர்ந்து மேயர் ராமச்சந்திரன் சுந்தர கணபதி தெரு, பாரதி தெரு, நாகர்படையாச்சி காடு ஆகிய பகுதிகளில் சாலை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்தார்.
முன்னதாக அவர் அஸ்தம்பட்டி மண்டலம் 6-வது வார்டில் பெரிய கொல்லப்பட்டி மூவேந்தர் நகரில் 15-வது நிதிக்குழு நிதியின் மூலம் ரூ.98 லட்சம் மதிப்பில் சாக்கடை கால்வாய் அமைப்பதற்கான பூமிபூஜையில் கலந்து கொண்டார். மணக்காடு காமராஜர் நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 20 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை மேயர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அம்மாப்பேட்டை மண்டல குழுத்தலைவர் தனசேகர், உதவி ஆணையாளர் கதிரேசன், உதவி செயற்பொறியாளர் சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.