தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது


தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 21 Jun 2023 1:15 AM IST (Updated: 21 Jun 2023 1:47 PM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது.

ஆய்வு கூட்டம்

தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பருவ மழையின் போது ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சரயு தலைமை வகித்து, ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

நிவாரண முகாம்களை கண்டறிந்து அவற்றை முழுமையான அளவில் தயார் செய்ய வேண்டும். முதல் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து குழுக்களிலும் பெண்கள், தன்னார்வலர்கள் உள்ளனரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வட்ட அளவில் பாம்பு பிடிக்கும் நபர்களின் விவரங்கள், மோட்டார் படகுகள், பரிசல்கள் விவரங்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அவரச கால சூழ்நிலைகளில் பங்கெடுத்து பணியாற்றும் வகையில் கோட்ட அளவிலான கூட்டம் நடத்தி பேரிடர் காலத்தில் பங்காற்ற அறிவுறுத்த வேண்டும்.

முன்னெச்சரிக்கை அறிவிப்புகள்

மேலும், பேரிடர் மீட்பு மற்றும் வெளியேற்றுதல் பணிகளுக்கு தேவையான சாதனங்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒலிப்பெருக்கி பொருத்திய வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு முறையான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை செய்ய வேண்டும். மேலும் தாசில்தார்கள், மழைமானி நிலையங்களை ஆய்வு செய்து, அவை நல்ல முறையில் செயல்படுவதையும், இடிந்து விழும் நிலையில் உள்ள ஆபத்தான பொது கட்டிடங்களை தணிக்கை செய்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் 10 முதல் தகவல் அளிப்பவர்களின் விவரங்களை சரியானவாறு பெற்று வைக்கப்பட வேண்டும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஏரி, குளம், குட்டை மற்றும் நீர் நிலைகளுக்கு செல்வதை அனுமதிக்க கூடாது. மேலும், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காலங்களில் தங்களது கால்நடைகளை ஆற்றங்கரையோரம் கொண்டு செல்லக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, உதவி கலெக்டர்கள் சரண்யா (ஓசூர்), பாபு (கிருஷ்ணகிரி) உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story